சட்டபூர்வமான இருப்பு விகிதத்தை ஒரு வீதத்தால் குறைப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் மார்ச் 1ஆம் திகதி முதல் சட்டபூர்வமான இருப்பு விகிதம் 5 வீதமாகக் காணப்படும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
நாட்டின் நிதிமுறையில் 60 பில்லியன் ரூபாய்களை உள்ளீடு செய்யும் நோக்கிலேயே சட்டபூர்வமான இருப்பு விகிதத்தை மத்திய வங்கி குறைத்துள்ளது.
உள்ளூர் நிதிச்சந்தை மற்றும் சர்வதேச நிதிச்சந்தை என்பவற்றை கவனமாக ஆராய்ந்தே சட்டபூர்வமான இருப்பு விகிதம் குறைக்கும் முடிவுக்கு வந்திருப்பதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
2018ஆம் ஆண்டு எதிர்பார்த்த தைவிட 3 வீத பொருளாதார வளர்ச்சியே பதிவாகியிருந்தது.
எனினும், 2019ஆம் ஆண்டு 4 வீத வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமார சுவாமி தெரிவித்தார்.
இருப்பு விகிதத்தை 5 வீதமாகக் குறைக்கின்றபோதும் நிதிக் கொள்கைகளில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படாது என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டார்.
உள்ளூர் நிதிச் சந்தையில் நீடித்துள்ள பற்றாக்குறையைக் குறைக்கும் நோக்கில் சில கொள்கை ரீதியான தலையீடுகளை மேற்கொள்ள மத்திய வங்கி தீர்மானித்திருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
தனியார் துறை கடன் கடந்த டிசம்பர் மாதத்தில் 15.9 வீதமாக அதிகரித்திருப்பதுடன், இது 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே காணப்படுகிறது.
2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் நடைமுறைக் கணக்கு நிலுவையானது பலமான நிலையில் காணப்படுவதாகவும், இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டு, ஏற்று மதி சற்று அதிகரித்திருப்பது இதற்குப் பிரதான காரணமாக அமைந்துள்ளது.
அது மாத்திரமன்றி உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட அந்நியச் செலாவணி அதிகரித்திருப்பதும் இதற்கான காரண மாக மத்திய வங்கி சுட்டிக்காட்டுகிறது.
அதேநேரம், கடந்த ஜனவரி மாதம் அரசாங்கத்தின் கடன்களுக்கான மீள்செலுத்துவதற்காக ஒரு மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளது. கடன்களை மீளச்செலுத்திய பின்னர் ஜனவரி மாத இறுதியில் இலங்கையின் வெளிநாட்டுக் கையிருப்பு 6.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் காணப்படுகிறது.
மகேஸ்வரன் பிரசாத்
No comments:
Post a Comment