அரச துறையின் பணிகள் பலவீனமடைவதற்கு இடமளிக்காது உரிய வகையில் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை - News View

About Us

About Us

Breaking

Saturday, November 17, 2018

அரச துறையின் பணிகள் பலவீனமடைவதற்கு இடமளிக்காது உரிய வகையில் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

அரச துறை நடவடிக்கைகள் மற்றும் மக்கள் சேவைகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பலவீனமடைவதற்கு இடமளிக்காது உரிய திட்டமிடல்களுடன் இலக்குகளை நோக்கி முறையாகவும் வினைத்திறனாகவும் அவற்றை முன்கொண்டு செல்லுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இன்று (17) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சுக்களின் செயலாளர்கள் மாவட்ட செயலாளர்கள், தலைமை செயலாளர்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பொன்றின்போதே ஜனாதிபதி அவர்கள் இந்த பணிப்புரையை விடுத்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகள் விரைவில் தீர்ந்துவிடும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அதுவரையில் அரச கட்டமைப்பின் நடவடிக்கைகளையும் மக்கள் சேவைகளையும் பலமாக முன்கொண்டு செல்வது அரச அதிகாரிகளின் பொறுப்பாகுமென்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அனைத்து அரசாங்க அதிகாரிகளும் பக்கச்சார்பின்றி தமது பொறுப்புக்களை நிறைவேற்றுவார்கள் என தான் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி. இதுவரையில் அது தொடர்பில் எந்தவொரு அரசாங்க அதிகாரிக்கும் எதிராக முறைப்பாடுகள் தெரிவிக்கப்படாமை குறித்து மகிழ்ச்சி வெளியிட்டார்.

அமைச்சுக்களின் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றபோது ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகள் குறித்து அமைச்சுக்களின் செயலாளர்கள் ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கினர். அது குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி இன்று இந்த கலந்துரையாடலில் வழங்கப்பட்ட விசேட பணிப்புரையின்பேரில் எவ்வித தடையுமின்றி அந்த நடவடிக்கைகளை முன்கொண்டு செல்லுமாறு குறிப்பிட்டார்.

துறைமுகம், மின்சாரம், பெற்றோலியம், சுகாதார சேவை மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் எவ்வித பிரச்சினையுமின்றி முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி இவற்றுக்கு இன்று உரிய முறையில் தீர்மானங்களை மேற்கொள்ளவிட்டால் இன்னும் சில மாதங்களில் நாடு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி இருக்குமென்றும் குறிப்பிட்டார்.

கிராம சக்தி மக்கள் இயக்கம் உள்ளிட்ட மக்கள் நலன்பேணும் நடவடிக்கைகளுக்காக நடைமுறைப்படுத்தப்படும் அரசாங்கத்தின் முக்கிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு விசேட கவனம் செலுத்துமாறு அரசாங்க அதிகாரிகளிடம் தெரிவித்த ஜனாதிபதி. அந்த நடவடிக்கைகளை கண்காணிக்குமாறு தான் அரசாங்க ஆளுநர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

போதுமானளவு மழை நீர் நாட்டுக்கு கிடைக்கப்பெற்றுள்ளமையால் நான்கு வருட வரட்சி நிலைமை நீங்கியுள்ள நிலையில் இதனை பயன்படுத்தி தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித்திட்டம் உள்ளிட்ட விவசாய நிகழ்ச்சித்திட்டங்களை வெற்றிகொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு குறிப்பிட்ட ஜனாதிபதி குறித்த விடயங்களுக்கு பொறுப்பான அமைச்சுக்களுடன் மாத்திரம் வரையறுத்துக்கொள்ளாது அனைத்து அரச நிறுவனங்களும் பேதங்களின்றி இதற்காக ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

அமைச்சுக்களின் நிதி முன்னேற்றம் மற்றும் மாவட்ட ரீதியான அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றங்கள் மீளாய்வு செய்யப்பட்டதுடன் முன் வைக்கப்பட்ட சில பிரச்சினைகள் தொடர்பில் மேலும் கலந்துரையாடி அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு தேவையான பணிப்புரைகளை வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment