ஜனாதிபதியின் பிரதிநிதி என்பதால்தான் ஆளுநருக்கு மதிப்புக்கொடுக்கின்றோம். ஆனால் அந்த ஆளுநர் ஏழைகளின் வயிற்றிலடிக்கும் வண்ணம் மனிதாபிமனமற்ற ரீதியில் நீதிக்குப்புறம்பாக நடந்துகொள்வதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கிழக்கில் நடப்பது நல்லாட்சியா காட்டாட்சியா?
இவ்வாறு காரைதீவில் ஆர்ப்பாட்டத்திலீடுபட்டுவரும் காரைதீவு பிரதேச சபை அமைய ஊழியர்கள் மத்தியில் உரையாற்றிய தமிழத் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் கேள்வியெழுப்பினார்.
காரைதீவு பிரதேச சபை நுழைவாயிலை மறித்து கடந்த இரு நாட்களாக ஆர்ப்பாட்டத்திலீடுபட்டுவரும் ஊழியர்களைச் சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் அவர்களோடு சில நிமிடங்கள் இருந்து கலந்துரையாடினார். பின்னர் ஊடகங்களுக்கு கருத்தும் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில் ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு முரணாக அரசியலுக்காக ஆளுநர் இந்தப்புதிய நியமனத்தை பின்வழியால் செய்துள்ளார். இதனால் பல ஆண்டு காலமாக இதை நம்பி ஜீவனோபாயம் நடாத்திவரும் அமைய ஊழியர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பிள்ளைகளின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. மறுபக்கம் உள்ளுராட்சி சபைகளின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன.
ஏழைகளின் தோழன் விவசாயிகளின் நண்பன் நல்லாட்சியின் தந்தை என்றெல்லாம் போற்றப்படும் ஜனாதிபதியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆளுநர் இந்த நியமனத்தைத் திணித்திருக்கிறார். இது கிழக்கில் உள்ளூராட்சி சபைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்குச் செய்யும் துரோகம். இது மனித நேயத்திற்கு அப்பாற்பட்டது. அவர்களையும் அவர்கள் குடும்பத்தையும் நடுத்தெருவிற்கு கொண்டு வந்துள்ளார். நிர்க்கதியான நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இவ்விடயத்தை இன்னும் ஜனாதிபதி அறியவில்லையா? உடனடியாக தலையிட்டு ஏழைத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும்.. இது விடயத்தை எமது தலைவர் சம்பந்தர் ஜயாவிடம் கூறி பிரதம மந்திரி மற்றும் ஜனாதிபதியிடம் கூறி உரிய தீர்வைப் பெற்றுத்தர ஆவன செய்வேன்.
கிழக்கிலுள்ள உள்ளுராட்சி சபைத் தலைவர்களை அழைத்துக்கொண்டு ஜனாதிபதியைச் சந்திக்க ஏற்பாடு செய்ய தயாராகவுள்ளேன். மறுபுறம் கிழக்கிலுள்ள சபைகளிலுள்ள அமைய ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும். தொழிங்சங்கங்களும் ஆதரவுதர தயாராகவுள்ளன. கிழக்கு கொந்தளிக்கின்றநிலை ஏற்படுவதை ஆளுநர் தவிர்க்க வேண்டும்.
ஆளுநர் உடனடியாக புதிய நியமனங்களை நிறுத்த வேண்டும். நிறுத்துவார் என்று நம்புகின்றோம். ஜனாதிபதி இதில் தலையிட்டு சிறந்த தீர்வைத் தருவார் என்றும் நம்புகின்றோம். என்றார்.
அச்சந்தர்ப்பத்தில் பிரதேச சபைத்த விசாளர் கி.ஜெயசிறில் கருத்துரைக்கையில் இது எமது 12 அமைய ஊழியர்க்கும் அழைக்கப்பட்ட அநீதி. இவர்களுக்காக நிரந்தர நியமனத்தை வழங்கிவிட்டு புதியவர்களை நியமியுங்கள். அதில் எமக்கு ஆட்சேபனை இல்லை.
நான் இன்று ஆளுநரை திருமலை சென்று சந்திக்கச் சென்றேன். அவர் மட்டக்களப்பிற்கு வந்து விட்டதாகச் சொன்னார்கள். நான் மீண்டும் மட்டக்களப்பிற்கு வந்து அவரைச் சந்தித்து முறைப்பாட்டைக்கையளித்து பேசினேன். தான் கவனிப்பதாகச் சொன்னார். மொத்தத்தில் சபைச் செயற்பாடுகள் முடங்கியுள்ளன. உடனடியாக தீர்வு காணாவிடின் பிரதேசம் நாறும். மக்கள் கொந்தளிப்பார்கள். என்றார்.
No comments:
Post a Comment