வளத்தை பாதுகாக்க கோரி வனத்தில் ஆர்ப்பாட்டம் – நடுக்காட்டில் பதாதை ஏந்திய மக்கள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 5, 2018

வளத்தை பாதுகாக்க கோரி வனத்தில் ஆர்ப்பாட்டம் – நடுக்காட்டில் பதாதை ஏந்திய மக்கள்

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (05) முல்லைத்தீவு புத்துவெட்டுவான் மற்றும் கொக்காவில் காட்டுப் பிரதேசத்தில் கவனயீர்ப்பு கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இயற்கையை அழித்து ஏற்படுத்துவது வளர்ச்சியா? எங்களை அழித்து இயற்கையைக் காப்பதா? வெயிலில் தெரியும் நிழலின் அருமை கோடையில் புரியும் காடுகளின் பெருமை எங்கள் வளத்தைப் பேணி எங்கள் வாழ்வைக் காப்போம்.

திட்டமில்லா மணல் அகழ்வு கெட்டுப் போகவா, எங்கள் வாழ்வு எனவும், நாங்கள் மரங்கள்தான் – ஆனால் உங்களின் நண்பர்கள் மழையத் தருவது எங்கள் கரங்களே மழையைத் தரும் மரங்களை அழிக்கலாமா? – இனிய பழங்களைத் தரும் மரங்களைச் சிதைக்கலாமா?

இங்கே அழிந்து கிடப்பது வேறொன்றுமில்லை உங்கள் வாழ்க்கைதான் அழியப்போவது நான் மட்டுமல்ல நீங்களும்தான் வாழவிடுங்கள் வாழ வைப்பேன் உங்கள் சுவாசக்காற்றை சுத்தமாக்குகின்றேன்.

என்னை விட்டு விடுங்கள் மழையை வரவழைத்து பசுமையை தருகிறேன் என்னை வாழவிடுங்கள் மானிடனே அற்ப காரணத்திற்காக அடியோடு வீழ்த்துகிறாயே வீழ்வது நான் மட்டுமல்ல நீயும்தான் என மரங்கள் பேசுவது போன்றும் வாசகங்கள் மரங்களில் கட்டப்பட்டிருந்தன.

இதன்போது, கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், இயற்கையே மனிதர்களின் உயரிய வளம். அந்த இயற்கையை அழித்து விட்டு மனிதர்களால் எப்படிப் பாதுகாப்பாக வாழ முடியும்?

இந்தப் பிரபஞ்சத்தில் பூமியில் மட்டும்தான் உயிரினங்கள் வாழ முடியும் என்று அறிவியல் சொல்கிறது. எனவே, அந்த இயற்கையைப் பேணிப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவருடைய பொறுப்பாகும் என்று அதே அறிவியலே கூறுகிறது.

ஆனால், இங்கே நடந்து கொண்டிருப்பது என்ன? நம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பேணிப் பாதுகாத்த இயற்கை வளங்கள் ஒரு சிறிய குழாத்தினரால் அவர்களுடைய நலனுக்காக அழிக்கப்பட்டும், அபகரிக்கப்பட்டும் வருகிறது.

இதனை, நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பிய, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமத்தும், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான முருகேசு சந்திரகுமார். இன்று உலகெங்கும் பருவம் தவறிய மழையே பெய்கிறது.

பருவப் பெயர்ச்சி மழை பொய்த்து விட்டது. வெயிலும் வெக்கையும் கூடியிருக்கிறது. வெள்ளமும் புயலும் பனியும் வரட்சியும் என்று மோசமான கால நிலைக் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இயற்கையின் சீற்றம் எல்லா இடத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் பேரழிவுகள் ஏற்படுகிறது.

இந்த அழிவு மக்களையே நேரடியாகப் பாதிக்கிறது. இயற்கையின் சீற்றத்தின் முன்னே எவராலும் எதிர்த்து நிற்க முடியாது. இயற்கை சீற்றமடைந்தால் அனைவருக்குமே பாதிப்பே ஏற்படும். வன்னிப் பிராந்தியம் காட்டு வளத்தையும் மணல் மற்றும் நீர் வளத்தையும் தாராமாகப் பெற்றது.

ஆனால், இன்று அபிவிருத்திக்கான அகழ்வு என்ற அடிப்படையில் திட்டமிடலின்றி மணலும் கிறவலும் அகழப்பட்டு, காடுகள் அழிவடைந்து வருகின்றன. நில அமைப்பே மாறி விட்டது.

இது மிக விரைவில் இந்தப் பிராந்தியத்தை வரண்ட வலையமாக்கி விடும். நீர் வசதியில்லாத அம்பாந்தோட்டை போன்ற பிரதேசங்களாக மிக விரைவில் வன்னிப் பிராந்தியமும் மாறி விடக்கூடிய அபாயம் நம்முடைய காலடியில் உள்ளது எனவே நாம் உடனடியாகவே இந்த தவறான நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இயற்கை அழிப்பைத் தடுப்போம் வாழ்வைக் காப்போம் என்ற தொனிப்பொருளில் திட்டமிடப்படாத கனிய வள அகழ்வுகளை தடுத்து நிறுத்துதோடு அபிவிருத்திக்காக இயற்கை வளங்களை அகழும் போது ஏற்படுகின்ற காடழிவு உள்ளிட்ட சூழல் பாதிப்புக்களை நிவர்த்தி செய்வதற்காக மீள் வளமாக்கல் போன்ற செயற்றிட்டங்களுக்கு குறித்த அபிவிருத்தி திட்டங்களிலேயே நிதி ஒதுக்கீடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் சூழயிலாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment