தெல்தெனிய பகுதியில் கடந்த மார்ச் மாதம் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் அரசாங்கம் கவலை அடைவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று தெரிவித்தார். அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற இப்தார் நோன்பு துறக்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தெல்தெனிய வன்முறைகளின் போது சட்டம் ஒழுங்கை சில நாட்களுக்கு நிலைநாட்ட முடியாமல் போனதாகவும், எனினும் சில நாட்களில் சுதாகரித்துக்கொண்டு சட்டம் ஒழுங்கை வழமைக்கு கொண்டுவர முடிந்ததாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந் நிலையில் அந்த வன்முறைகள் குறித்த விசாரணைகள் தொடரும் நிலையில், ஒரு சாராரை தொடர்ந்தும் சட்ட ரீதியாக சிறைப்படுத்தி வைத்துள்ளதாகவும், கடந்த சில மாதங்களுக்குள் மட்டும் நூற்றுக்கும் அதிகமான இவ்வாறான சம்பவங்கள் குறித்த விசாரணைக் கோவைகள் சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இவ்வாறு வன்முறைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை நடை முறைப்படுத்துவதன் ஊடாக எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை தவிர்த்து, மேலும் ஒற்றுமையுடன் முன்னோக்கி செல்வதை உறுதி செய்ய வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
புனித ரமழான் நோன்பு துறக்கும் வைபவமொன்றினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையில் ஏற்பாடு செய்திருந்தார். இதில் பிரதமருக்கு மேலதிகமாக சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர், வெளிநாட்டுத் தூதுவர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
இதில் இப்தார் நிகழ்வுக்கு அனைவரையும் வரவேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார். இதன்போதே அவர் மேற்கொண்ட விடயங்களைத் தெரிவித்தார்.
இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாவது, 'முஸ்லிம்களுக்கு இந்த ரமழான் நோன்பு துறக்கும் வைபவம் மிக முக்கியமானது. அதனூடாக அவர்கள் தமது மத அனுஷ்டானங்களை மிக அமைதியாக வெளிப்படுத்துகின்றனர்.
பல்வேறு இன மக்கள் வாழும் நாட்டில் அமைதியை உறுதி செய்ய ஒவ்வொரு இன, மத, கலாசாரத்தை பின்பற்றும் மக்களும் அவற்றை அனுபவிக்கத்தக்க சூழலை ஏற்படுத்த வேண்டும்.
எனினும் இவ்வாறான பல் இன, மத நாடுகளில், பிரச்சினைகள், குழப்பங்கள், வன்முறைகள், அடிப்படைவாதம் என பல சிக்கல்கள் உருவாகும். அவற்றை வெற்றிகரமாக முகம் கொடுத்து, அனைவரும் தத்தமது கலாசாரத்தை, மதத்தை அனுபவிக்கும் சூழலை உருவாக்கும் போதே ஒற்றுமை சாத்தியமாகும்.
உண்மையில் தெல்தெனிய பகுதியில் கடந்த மார்ச் மாதம் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் அரசாங்கம் என்ற ரீதியில் நாம் கவலை அடைகிறோம். விலை மதிப்பற்ற உயிர்கள் இதில் காவுகொள்ளப்பட்டது. சில நாட்கள் சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்படவில்லை. எனினும் பின்னர் அது ஒழுங்காக நடைமுறைக்கு வந்தது.
பலரைக் கைது செய்தோம். முகப்புத்தகத்தை தடை செய்தோம். கைது செய்யப்பட்டவர்களில் சிலர் பிணையில் உள்ளனர். மேலும் பலரை சட்ட ரீதியாக சிறையில் வைத்துள்ளோம். இது குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றது என்றார்.
Vidivelli
No comments:
Post a Comment