கடந்த மார்ச் மாதம் கண்டிப் பிரதேசத்தில் இடம்பெற்ற வன்செயல்களினால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிவாசல்களின் நிர்வாகங்கள் பல அரசாங்கத்தினால் வழங்கப்படும் நஷ்டஈட்டுத் தொகையைப் பெற்றுக் பெற்றுக் கொள்வதில் கரிசனை காட்டாமையால் புனர்வாழ்வு, அமைச்சு பல அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக புனர்வாழ்வு அமைச்சின் மேலதிக பணிப்பாளர் எஸ்.எம். பதுர்தீன் தெரிவித்தார்.
கண்டி வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களுக்கான நஷ்டஈடுகள் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்
கண்டி மாவட்டத்தின் 11 பிரதேச செயலாளர்கள் பிரிவுகளில் உள்ள 18 பள்ளிவாசல்கள் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற வன்செயல்களினால் பாதிக்கப்பட்டன. இவற்றில் 9 பள்ளிவாசல்களுக்கான நஷ்டஈடுகளை புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மீள் குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகாரங்கள் அமைச்சு ஏற்கனவே வழங்கிவிட்டது. பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களுக்கு முழுமையான நஷ்டஈடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை 9 பள்ளிவாசல்கள் நஷ்டஈட்டினைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான ஆவணங்களை அமைச்சுக்கு மூன்று மாதங்கள் கடந்தும் இதுவரை சமர்ப்பிக்கவில்லை. விண்ணப்பங்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய பள்ளிவாசல் பதிவிலக்கம், வங்கிக் கணக்கிலக்கம் என்பன சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த ஆவணங்கள் இல்லாத பள்ளிவாசல்களுக்கு நஷ்டஈடுகள் வழங்க முடியாது. பள்ளிவாசல் நிர்வாகங்கள் அரச நஷ்டஈட்டினைப் பெற்றுக்கொள்வதில் அசமந்தப் போக்கினைக் கடைப்பிடித்து வருகின்றன.
அமைச்சு பள்ளிவாசல்களுக்கான முழுமையான நஷ்டஈட்டினைப் பெற்றுக் கொடுப்பதற்கு தயாரான நிலையில் உள்ளது. குறிப்பிட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்பே அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டு நஷ்டஈடு வழங்குவதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
அமைச்சு குறிப்பிட்ட 9 பள்ளிவாசல்களின் ஆவணங்களைக் கோரியும் இதுவரை அனுப்பி வைக்கப்படவில்லை. இதனால் இந்தப் பள்ளிவாசல்கள் தனியார் உதவிகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாக எண்ணத் தோன்றுகிறது என்றார்.
இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் கண்டி கிளையின் செயலாளரும் கண்டி உதவி மையத்தின் செயலாளருமான மௌலவி ஏ.எல்.ஏ. கப்பாரை தொடர்பு கொண்டு வினவியபோது அவர் பின்வருமாறு விடி வெள்ளிக்குத் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட பள்ளிவாசல்கள் சில பதிவு செய்யப்படவில்லை என்பதை அறிகிறோம். அவற்றைப் பதிவு செய்து கொள்ளுமாறு நிர்வாகங்களுக்கு உலமா சபையும் கண்டி உதவி மையமும் பல தடவைகள் அறிவிப்பு விடுத்துள்ளன என்றார்.
இது தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம். ஆர்.எம். மலிக் கருத்து தெரிவிக்கையில்,
‘இரு பள்ளிவாசல்கள் இதுவரை பதிவு செய்யப்படவில்லை என எமக்கு அறியக் கிடைத்துள்ளது. குறிப்பிட்ட பள்ளிவாசல் நிர்வாகம் கோரினால் பதிவுக்கான விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படும். பள்ளிவாசல்கள் பதிவு செய்யப்படுவது கட்டாயமாகும். பதிவு செய்யப்படாதுள்ள பள்ளிவாசல்கள் தொடர்பில் வக்பு சபை கவனம் செலுத்தும் என்றார்.
Vidivelli
Vidivelli
No comments:
Post a Comment