கிளைபோசெட் களைக்கொல்லியின் மீதான இறக்குமதி தடை நீக்கப்பட்ட பின்னர் தற்போது 32 கொள்கலன்களில் இக்களைக் கொல்லி இறக்குமதி செய்யப்பட்டு கொழும்பு துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். பல்வேறு நாடுகளில இருந்து இவை இறக்குமதி செய்யப்பட்டிருப்பதால் இவற்றின் களைநாசினித் திறன் வேறுபட்டிருக்கும்.
எனவே இவற்றின் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு இலங்கை பெருந்தோட்டங்களில் பயன்படுத்தப்படுவதற்கு இவை உகந்தவைதானா என்பது பரிசீலனை செய்யப்பட வேண்டியது அவசியம்.
கிளைபோசெட் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் தொடர்பாக நேற்று கொழும்பு செமா நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பத்திரிகையாளர்களுக்கான தெளிவூட்டல் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் வண. அத்துரலியே ரதன தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையின் தர நிர்ணயங்களுக்கு அமைவாக இல்லாத விடத்து அவற்றைத் திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
இம் மாநாட்டில் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேல் உரையாற்றியதோடு கேள்விகளுக்கும் பதிலளித்து அமெரிக்க கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகமொன்றில் பேராசிரியராக பணியாற்றி வரும் மருத்துவர் சனத் குணதிலக்கவின் உரையின் பின்னர் நன்றியுரையாற்றிய தேரர், கிளைபோசெட் களைநாசினி நாட்டில் எற்படுத்தி வரும் சுகாதார கேடுகள் தொடர்பாக தான் 2013ம் ஆண்டு முதல் எதிர்வினையாற்றி வருவதாகவும், கடந்த ஆட்சியின்போது இதைத் தடை செய்ய தான் எடுத்த முயற்சிகள் வியர்த்தமானதையும் குறிப்பிட்டார்.
எனினும் புதிய அரசு பதவியேற்ற பின்னரே கிளைபோசெட்டை தடை செய்ய முடிந்ததாக கூறிய தேரர்,இறப்பர் மற்றும் தேயிலைத் தோட்டப் பாவனைக்காக கிளைபோசெட்டை மீண்டும் அரசாங்கம் அனுமதித்திருப்பதை விமர்சித்தார். “2013 இல் கிளைபோசெட் தொடர்பான உலக சுகாதார ஸ்தானம் வெளியிட்ட ஆய்வறிக்கை, இது எந்தளவு ஆபத்தானது என்பதை வெளிப்படுத்துவதாக இருந்தது. ஆனால் அந்த அறிக்கையின் பிரதி ஒன்றைப் பெறுவதற்கு நான் சிரமப்பட வேண்டியிருந்தது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக் காரியாலமும் சரி சுகாதார அமைச்சும் சரி, இந்த அறிக்கை தொடர்பாக மெளனம் காத்தன.
இதுதான் நிலைமை. கிளைப்போசெட்டுக்கு மீண்டும் அனுமதி வழங்குவது தொடர்பான பேச்சு எடுத்தபோது நாங்கள் பண்டாரநாயக்க மண்டபத்தில் ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்து இரு தரப்பினரையும் அங்கு அழைத்தோம். எனினும் கிளைபோசெட் ஏன் ஆபத்தானது என்பதை விளக்கி உரையாற்றக்கூடியவற்றுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படாமல் தவிர்க்கப்பட்டது.
இறுதியில் ஜனாதிபதியின் ஒப்புதழையும் பெற்றுவிட்டார்கள்” என்று இங்கு உரையாற்றியபோது தெரிவித்த அத்துரெலியே ரதன தேரர், கடந்த 25 ஆண்டுகளாக இந்நாட்டில் ஊறிப்போய்விட்டிருக்கும் கிளைபோசெட் கல்யாணத்துக்கு முடிவுகட்ட மேலும் பல ஆண்டுகள் போராட வேண்டியிருக்கும் எனவும், கிளைபோசெட் களைநாசினியின் ஆபத்து பற்றி செய்திகள் இன்னும் மக்களையும் குறிப்பாக விவசாயிகளையும் சென்றடையவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அருள் சத்தியநாதன்
No comments:
Post a Comment