ஊழல் வழக்கில் தென்கொரியா முன்னாள் அதிபருக்கு 24 ஆண்டுகள் சிறை - News View

About Us

About Us

Breaking

Friday, April 6, 2018

ஊழல் வழக்கில் தென்கொரியா முன்னாள் அதிபருக்கு 24 ஆண்டுகள் சிறை

ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தனது நெருங்கிய தோழியுடன் சேர்ந்து ஊழல் செய்த தென்கொரியா முன்னாள் அதிபர் பார்க் கியூன் ஹே-வுக்கு இன்று 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தென்கொரியா நாட்டின் முன்னாள் அதிபர் பார்க் சுங்-ஹீ கடந்த 1963 முதல் 1979 வரை அந்நாட்டின் சர்வாதிகாரிபோல் ஆட்சி செலுத்தி வந்தார். கடந்த 1978-ம் ஆண்டில் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

அவரது மறைவுக்கு சில ஆண்டுகளுக்கு பின்னர் அரசியலில் குதித்த பார்க் சுங்-ஹீ-யின் மகள் பார்க் கியூன் ஹே கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று தென்கொரியாவின் அதிபராக பதவி ஏற்றார். ஊழலற்ற ஆட்சியை வழங்குவேன் என்ற வாக்குறுதியுடன் ஆட்சியை கைப்பற்றிய பார்க் கியூன் ஹே வெகு குறுகிய காலத்தில் பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கினார்.

அதிபரின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில் அரசு விவகாரங்களில் தலையீடு செய்துவருவதாகவும், அரசின் மிகமுக்கிய ரகசிய கோப்புகளை ஆய்வு செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பின.

மேலும், அதிபருடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி, சாம்சங் உள்ளிட்ட பல நிறுவனங்களிடம் இருந்தும் நன்கொடைகளை பெற்று, இவர் ஆதாயம் அடைந்து வருவதாகவும் அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஆதாரங்களுடன் குற்றம்சுமத்தின.

இதையடுத்து சோய் சூன் சில் கைது செய்யப்பட்டார். அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
அதிபர் பார்க் கியூன் ஹே உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் சுமார் 13 லட்சம் மக்கள் பங்கேற்ற பேரணியும் ஆர்ப்பாட்டமும் சியோல் நகரில் நடைபெற்றது. இதையடுத்து, பாராளுமன்றத்தில் பார்க் கியூன் ஹே-வுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

பாராளுமன்றத்தின் தீர்மானத்தை எதிர்த்து பார்க் கியூன் ஹே அந்நாட்டின் அரசியலமைப்பு சட்ட உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த முறையீட்டின் மீது விசாரணை நடத்திய நீதிபதி, பார்க் கியூன் ஹே-வை பாராளுமன்றம் பதவி நீக்கம் செய்தது செல்லும், அவர் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் என உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தனது நெருங்கிய தோழியுடன் சேர்ந்து ஊழல் செய்ததன் மூலம் 2 கோடியே 30 லட்சம் வோன் (அமெரிக்க டாலர்களில் சுமார் 2 கோடியே பத்து லட்சம்) அதிகமான பணப்பலன்களை பார்க் கியூன் ஹே அடைந்ததாக விசாரணை மூலம் நிரூபணமானது.

இதையடுத்து, இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி கிம் சே-யூன், குற்றவாளி பார்க் கியூன் ஹே-வுக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு கோடியே 80 லட்சம் வோன் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். 

வழக்கமாக நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்துவந்த பார்க் கியூன் ஹே இந்த தீர்ப்பின்போதும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. தென்கொரியா நாட்டு நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக இந்த தீர்ப்பு முழுவதும் தொலைக்காட்சி மூலம் நேரடியாக ஒளிபரப்பானது, குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment