பள்ளிவாசல்களில் மிருகங்களை அறுப்பதை தடை செய்தது ஏன்? : விமர்சனங்களுக்கு விளக்கமளித்துள்ள முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் - News View

Breaking

Post Top Ad

Saturday, July 17, 2021

பள்ளிவாசல்களில் மிருகங்களை அறுப்பதை தடை செய்தது ஏன்? : விமர்சனங்களுக்கு விளக்கமளித்துள்ள முஸ்லிம் சமய கலாசார திணைக்களம்

மிருங்களை பள்ளிவளாகத்தில் அறுப்பது (குர்பான்) நிறுத்தப்பட்டது தொடர்பான விமர்சனங்களுக்கு முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் விளக்கமளித்துள்ளது.

பள்ளிவாசல்களின் புனிதத்துவத்தை பாதுகாக்க வேண்டும். பள்ளிவாசல் மாடுகள் அறுக்கும் இடமல்ல. மாடு அறுப்பதற்கு வேறு இடங்கள் இருக்கின்றன எனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. வக்பு சபை அரசியலுக்கு அப்பாற்பட்டது. இதனை அரசியலாக்காதீர்கள் எனவும் அது கோரியுள்ளது.

இலங்கை ஒரு பெளத்த நாடு. பல நூற்றாண்டுகளாக இந்த மக்களோடு நாம் நல்லுறவுடன் வாழ்ந்து வருகிறோம் என்பது மட்டுமல்ல இந்த நாட்டில் நமது இருப்புக்கு பெளத்தர்கள் பக்கபலமாக இருந்து வருகிறார்கள். 

குறிப்பாக விகாரைகளும் பிக்குகளும் நமது இருப்புக்கு ஆதரவளித்தவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. பல மண்டபங்களில் நமது வியாபாரிகள் தரித்திருந்துள்ளனர். விகாரை வளாகத்தில் சமைத்து உண்டுள்ளனர். பிக்குகள் விகாரை நிலத்தை நமது பள்ளிவாசல் அமைக்க வழங்கியுள்ளனர். இந்த உறவுகளை புனர்நிர்மாணம் செய்ய வேண்டிய காலம் இது.

அதே போல ஆங்கிலேயரின் பிரித்தாளும் உத்திகளுக்கு பலியான இரு தரப்பு புல்லுருவிகளாலும் கடந்த இரண்டு மூன்று நூற்றாண்டுகளில் எமது இரு சமூக உறவுகளும் பாதிப்புக்குள்ளாகியமை கண்கூடு.

அண்மைக் காலமாக மேற்குலகால் கோடிக்கணக்கான டொலர்களைக் கொட்டி உலகெங்கும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இஸ்லாமோ போபியாவின் அதிர்வுகளும் நம் நாட்டைப் பாதித்துள்ளது. 

எனவே இலங்கையில் இஸ்லாமிய விரோத சக்திகளும் சர்வதேச சக்திகளும் கைகோத்துள்ளமையை நாம் மறந்துவிடலாகாது.

99 வீதமான பௌத்த மக்கள் முஸ்லிம் விரோதிகளல்லர். அவர்களது உணர்வுகளை மதித்து நடப்பது இஸ்லாத்தை விட்டுக் கொடுப்பதாகாது. 99 வீத பௌத்தர்கள் மாடறுப்பதை விரும்பாதவர்கள். 

மத ரீதியான காரணங்களை விடவும் கலாசார பாரம்பரிய காரணங்களும் இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் மாடறுப்பு என்பது அவர்களது உணர்வுகளைச் சூடேற்றும் விடயம் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்தப் பின்னணியில் 2021 ஈதுல் அழ்ஹாவும் குர்பான் கடமையும் பார்க்கப்படல் வேண்டும். குர்பான் என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தொடர்பான ஒரு முக்கிய கடமை. ஆனால் அது பர்ளானதல்ல. மாறாக ஒரு சுன்னா முஅக்கதா கட்டாய சுன்னாவாகும்.

இருந்தாலும் இந்த சுன்னத்தான அமலை செய்கின்ற போது பள்ளிவாசலை அதற்கான இடமாகக் கொள்ள வேண்டாம் என்று வக்பு சபை சொல்கிறது. 

ஆகவே, பள்ளிவாசல்களைத் தவிர்த்து வேறு மாற்று வழிகளில் கூட்டாகவோ தனியாகவோ குர்பான் கடமையைச் செய்வதற்கான வழிவகைகளை ஆராய்வது சமூகத்தலைமைகளின் கடமையாகும்.

அதை விடுத்து இத்தகைய காலத்துக்குப் பொருத்தமான முடிவுகளை துணிச்சலாக எடுத்த வக்பு சபை உறுப்பினர்களையோ பணிப்பாளரையோ குறிவைப்பது நியாயமாகாது எனவும் முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad