அரசாங்கம் தனிமைப்படுத்தல் சட்டத்தை பக்கச்சார்பாகப் பிரயோகிப்பது கண்டிக்கத்து - இலவசக் கல்வியை இராணுவமயமாக்கும் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழக சட்ட மூலம் மீளப் பெறப்பட வேண்டும் : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, July 13, 2021

அரசாங்கம் தனிமைப்படுத்தல் சட்டத்தை பக்கச்சார்பாகப் பிரயோகிப்பது கண்டிக்கத்து - இலவசக் கல்வியை இராணுவமயமாக்கும் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழக சட்ட மூலம் மீளப் பெறப்பட வேண்டும் : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக அமுல்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் சட்டத்தை அரசாங்கம் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, ஜனநாயகப் போராட்டங்களை அடக்குவதும் ஒரு சாராருக்கு மாத்திரம் பாதிப்பேற்படக்கூடியவாறு அச்சட்டத்தைப் பக்கச்சார்பாகப் பிரயோகிப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்த செயற்பாடுகளாகும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்திருக்கின்றது.

அதுமாத்திரமன்றி தனிமைப்படுத்தல் சட்டமானது, அரசியலமைப்பின் பிரகாரம் அச்சட்டத்தைப் பிரயோகிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளவர்களால் மாத்திரம் கையாளப்படும் அதேவேளை, அச்சட்டம் அனைவருக்கும் ஒரே விதமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் மேற்படி சங்கம் வலியுறுத்தியிருக்கின்றது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் கொழும்பில் நேற்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அச்சங்கத்தின் செயற்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினரான வைத்திய நிபுணர் வாசன் ரட்ணசிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, நாடளாவிய ரீதியில் அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் சட்டமானது தவறான முறையில் பயன்படுத்தப்படுவதாகப் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதுமாத்திரமன்றி ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்ட மூலத்தினை நிறைவேற்றுவதானது, கல்விக் கட்டமைப்பை இராணுவமயப்படுத்தும் செயற்பாடாக அமையுமென்றே நாம் கருதுகின்றோம்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் அதனாலேற்படும் உயிரிழப்புக்களைத் தவிர்த்தல் ஆகிய நோக்கங்களுக்காகவே நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இச்சட்டத்தை செயற்படுத்தும் அதிகாரம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

எனினும் சில விடயங்களில் இந்தத் தனிமைப்படுத்தல் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவே நாம் கருதுகின்றோம். குறிப்பாக ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்ட மூலத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கோஷத்துடன் ஆட்சிபீடமேறிய தற்போதைய அரசாங்கம் தனிமைப்படுத்தல் சட்டத்தைப் பிரயோகிப்பதில் பக்கச்சார்பான தன்மையைக் கடைப்பிடிக்கின்றமை வெளிப்பட்டுள்ளது.

அதிலும் மாணவர்களால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களையும் தொழிற்சங்கப் போராட்டங்களையும் கட்டுப்படுத்தும் விதத்தில் இந்தத் தனிமைப்படுத்தல் சட்டம் பயன்படுத்தப்படுவதென்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

ஒரு சாராருக்கு எதிராகத் தனிமைப்படுத்தல் சட்டம் பிரயோகிக்கப்படும் அதேவேளை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிச் செயற்படும் பிறிதொரு தரப்பினருக்கு எதிராக அச்சட்டம் பிரயோகிக்கப்படாமையானது தனிமைப்படுத்தல் சட்டத்தின் அமுலாக்கம் மீது நாட்டு மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் சட்டத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, ஜனநாயகப் போராட்டங்களை அடக்கும் வகையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகள் மிகவும் கண்டிக்கத்தக்கவையாகும். தனிமைப்படுத்தல் சட்டமானது நாட்டு மக்கள் அனைவரின் மீதும் சமமான முறையில் பிரயோகிக்கப்படுவது அவசியமாகும்.

தற்போது வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலில் இருப்பதற்கான வழிகாட்டல்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சிலர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளமை கண்டிக்கத்தக்கதாகும்.

ஆகவே இச்சட்டத்தைப் பிரயோகிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளவர்கள் மாத்திரம் அதனைக் கையாளும் அதேவேளை, தனிமைப்படுத்தல் சட்டம் அனைவருக்கும் ஒரேவிதமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அதுமாத்திரமன்றி நாட்டின் இலவசக் கல்விக் கட்டமைப்பில் இராணுவமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்ட மூலம் மீளப் பெறப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad