நாடளாவிய ரீதியிலுள்ள ஆசிரியர் சமூகத்தை அவமதிக்கும் கருத்து, அரசாங்கம் உடனடியாக மன்னிப்புக் கோர வேண்டும் : ஒன்றிணைந்த ஆசிரியர் சேவை சங்கம் - News View

Breaking

Post Top Ad

Monday, July 12, 2021

நாடளாவிய ரீதியிலுள்ள ஆசிரியர் சமூகத்தை அவமதிக்கும் கருத்து, அரசாங்கம் உடனடியாக மன்னிப்புக் கோர வேண்டும் : ஒன்றிணைந்த ஆசிரியர் சேவை சங்கம்

(நா.தனுஜா)

தனியொரு ஆசிரியரை மாத்திரம் பயன்படுத்தி இணைய வழிக் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவினால் வெளியிடப்பட்ட கருத்து, ஆசிரியர்கள் தொடர்பில் ஒட்டு மொத்த அரசாங்கமும் கொண்டிருக்கும் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. இது நாடளாவிய ரீதியிலுள்ள ஆசிரியர் சமூகத்தை அவமதிக்கும் வகையிலான கருத்தாகும். இதனை அரசாங்கம் உடனடியாகத் திருத்திக் கொள்ளும் அதேவேளை, ஆசிரியர் சமூகத்திடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்று ஒன்றிணைந்த ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ பண்டார வலியுறுத்தியுள்ளார்.

மேலும் வெளிநாட்டிலிருந்து அதி சொகுசு வாகனங்களைத் தருவித்துக் கொள்வதில் காண்பித்த அக்கறையை, மாணவர்களுக்குரிய கல்வியை இடையூறுகளின்றிப் பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் காண்பிக்கவில்லை. குறைந்தபட்சம் இணைய வசதியைக் கூடப் பெற்றுக் கொடுக்காத அரசாங்கத்தினாலேயே தற்போது மேற்குறிப்பிட்டவாறான பொறுப்பற்ற கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து பல்லேகல இராணுவ தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து அவரால் வெளியிடப்பட்டிருக்கும் காணொளியில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, அரசாங்கத்திற்கு எதிரான அதிபர் மற்றும் ஆசிரியர்களின் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். எமது கோரிக்கைகளுக்குரிய தீர்வுகள் வழங்கப்படா விட்டால், இந்தப் போராட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டுத் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதனை நிறுத்த முடியாது. எனினும் இவையனைத்திலிருந்தும் அரசாங்கம் இன்னமும் பாடங்கற்றுக் கொள்ளவில்லை என்றே தோன்றுகின்றது.

ஆகையினால்தான் இணைய வழியில் (ஒன்லைன்) கற்பிப்பதற்கு ஒரு ஆசிரியர் இருந்தால் மாத்திரம் போதுமானது என்று கூறுகின்றார்கள். இந்தக் கருத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவினால் கூறப்பட்டாலும், இதுவே ஆசிரியர்கள் தொடர்பில் அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாடாக இருக்கின்றது.

எனவே இந்தக் கருத்தானது நாடளாவிய ரீதியிலுள்ள ஆசிரியர்களை அவமதிக்கும் செயலாகும். இதனை அரசாங்கம் உடனடியாகத் திருத்திக் கொள்ள வேண்டும். அடுத்ததாக இணைய வழி மூலமான கற்பித்தல் நடவடிக்கையை ஆசிரியர்கள் அவர்களது சுயவிருப்பின் அடிப்படையிலேயே முன்னெடுத்து வருகின்றார்கள். மாறாக அரசாங்கம் இதற்குரிய வசதிகள் எதனையும் வழங்கவில்லை.

இணைய வழிக் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அவசியமான வசதிகளைப் பெற்றுக் கொடுக்குமாறு ஆசிரியர்களும் ஆசிரியர் சங்கங்களும் கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், அதற்குரிய எந்தவொரு நடவடிக்கைகளும் கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்படவில்லை.

வெளிநாட்டிலிருந்து அதி சொகுசு வாகனங்களைத் தருவித்துக் கொள்வதில் காண்பித்த அக்கறையை, மாணவர்களுக்குரிய கல்விச் செயற்பாடுகளை இடையூறுகளின்றிப் பெற்றுக் கொடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அரசாங்கம் காண்பிக்கவில்லை. குறைந்தபட்சம் இணைய வசதியைக் கூடப் பெற்றுக் கொடுக்கவில்லை. அத்தகைய அரசாங்கத்தினாலேயே தற்போது மேற்குறிப்பிட்டவாறான பொறுப்பற்ற கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.

தமக்கு வழங்கப்படும் மிகச்சொற்ப ஊதியத்தைப் பயன்படுத்தி, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் மாணவர்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்து, சுயவிருப்பின் அடிப்படையில் இணைய வழிக் கல்வியை முன்னெடுத்து வரும் ஒட்டு மொத்த ஆசிரியர் சமூகத்தையும் இந்த அரசாங்கம் அவமதித்துள்ளது.

ஆகவே இது விடயத்தில் அரசாங்கமானது உடனடியாக ஆசிரியர்களிடம் மன்னிப்புக்கோர வேண்டும். அவ்வாறில்லாமல், அரசாங்கம் தற்போதைய பாதையிலேயே பயணிக்குமானால் அதே முறையில் பதிலளிக்க ஆசிரியர்களும் தயாராக இருக்கின்றார்கள்.

ஒரேயொரு ஆசிரியரை மாத்திரம் பயன்படுத்தி அரசாங்கம் எவ்வாறு இணைய வழிக் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்றது என்று பார்ப்பதற்கு நாமும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றோம்.

இணைய வழிக் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியிருப்பதன் விளைவாக மாணவர்களின் எதிர்காலம் பாதிப்படைகின்றது என்பதை நாமறிவோம். அதனால் இதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதை நாம் விரும்பவில்லை.

ஆனால் எமது கோரிக்கைகளைப் புறக்கணிக்கும் அதேவேளை, ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்ட மூலத்தின் ஊடாக கல்வியை விற்பனை செய்வதற்கும் அதற்கு எதிராகப் போராடுபவர்கள் மீது அடக்கு முறையைப் பிரயோகிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் நாங்களும் அமைதியாக இருக்கமாட்டோம்.

தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களிடம் நாம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகின்றோம். இந்த அரசாங்கம் உங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்தித்துள்ளதா? அவர்கள் கல்வியைப் பெறுவதற்கு அவசியமான வசதிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளதா? மீண்டும் பாடசாலைகளைத் திறப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றதா? எனவே தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக அனைவரும் கைகோர்க்க வேண்டிய காலம் வந்திருக்கின்றது.

நாட்டின் இலவசக் கல்வியையும் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் கல்விக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கும் எமது போராட்டத்துடன் அனைத்துப் பெற்றோர்களும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad