வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியான இரு தரப்பு நல்லுறவை மேம்படுத்துவதில் தீவிர கவனம் - பாகிஸ்தானின் உயர்மட்டப் பிரதிநிதிகள் குழு இலங்கை விஜயம் : உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் முஹம்மது சாத் கட்டாக் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 13, 2021

வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியான இரு தரப்பு நல்லுறவை மேம்படுத்துவதில் தீவிர கவனம் - பாகிஸ்தானின் உயர்மட்டப் பிரதிநிதிகள் குழு இலங்கை விஜயம் : உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் முஹம்மது சாத் கட்டாக்

(நா.தனுஜா)

இலங்கையுடனான வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியான இரு தரப்பு நல்லுறவை மேம்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் இது குறித்து இலங்கையின் பல்துறைசார் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருப்பதாகவும் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) முஹம்மது சாத் கட்டாக் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இவ்வருட ஆரம்பத்தில் இடம்பெற்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் இலங்கைக்கான விஜயத்தைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒத்துழைப்புக்கள் மேம்பாடடைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், எதிர்வரும் இரு வார காலத்தில் பாகிஸ்தானின் வர்த்தக மற்றும் முதலீட்டுச் சபைகளின் உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, முதலாவதாக எமது கடமைகளை முன்னெடுப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வரும் இலங்கையின் தற்போதைய அரசாங்கத்திற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எமது நன்றியை வெளிப்படுத்த விரும்புகின்றோம்.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் பேணப்பட்டு வரும் நீண்ட கால நட்புறவை மேலும் விரிவுபடுத்துவதற்கு எதிர்பார்த்திருக்கும் அதேவேளை, எவ்வித இன, மத வேறுபாடுகளுமின்றி இலங்கை மக்களுக்குத் தேவையான அனைத்துவித ஒத்துழைப்புக்களையும் தொடர்ந்து வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம்.

அத்தோடு பல்துறை சார்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதே பாகிஸ்தான் அரசாங்கத்தின் கொள்கையாகவும் காணப்படுகின்றது.

அண்மைக் காலத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு உலகமும் பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில் எமது பிராந்தியமும் பாரிய சவால்களை எதிர்கொண்டிருக்கின்றது.

எனினும் இவற்றுக்கு மத்தியில் இயலுமான வரையில் சமநிலையொன்றை பேணுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் முன்னெடுத்து வருகின்றன.

அதேவேளை பாகிஸ்தானும் பூகோள அரசியல் கொள்கையிலிருந்து மாற்றம் காணும் பூகோள பொருளாதாரக் கொள்கைகளுக்கு அமைவாக இலங்கையுடனான வர்த்தக மற்றும் பொருளாதாரத் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்திக் கொள்ளும் நோக்கில் பல்துறைசார் அமைச்சர்களுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

பாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான வாணிபத் தொடர்புகளை மேம்படுத்துவது எமது பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது.

அதேபோன்று மறுபுறம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் அரசியலமைப்பு ஆகியவற்றுக்கு எதிராக ஜம்மு - காஷ்மீர் தொடர்பில் இந்தியாவினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகளுக்கு எதிரான நிலைப்பாட்டையே தொடர்ச்சியாகப் பேணி வருகின்றோம்.

அதுமாத்திரமன்றி எச்சந்தர்ப்பத்திலும் ஜம்மு - காஷ்மீர் மக்களுடனான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதுடன் அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியில் அவர்களுக்கான தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதற்கும் தயாராக இருக்கின்றோம்.

மேலும் பொருளாதாரம், சமூகம், வர்த்தகம், ஊடகம், கல்வி, சுற்றுலா, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகள் சார்ந்தும் இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை விரிவாக்கம் செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்தோடு இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கான தேயிலை ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தயாராக இருக்கின்றோம்.

இவ்வருட ஆரம்பத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தபோது இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வர்த்தக மாநாட்டில் சுமார் 34 இற்கும் அதிகமான பெரு வணிகர்கள் கலந்துகொண்டிருந்தனர். அதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகளையும் வாய்ப்புக்களையும் விரிவுபடுத்துவது குறித்துப் பல்வேறு முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

அத்தோடு இலங்கையைச் சேர்ந்த பௌத்த தேரர்களின் குழுவொன்று அண்மையில் பாகிஸ்தானுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்ததன் ஊடாக இரு நாடுகளுக்கு இடையிலான மத ரீதியான சுற்றுலா பெருமளவிற்கு ஊக்கம் பெற்றுள்ளது.

எனினும் மறுபுறம் பாகிஸ்தானில் பார்வையிடுவதற்கு உகந்த பல சுற்றுலாத் தளங்கள் உள்ளன. எனவே பாகிஸ்தானுக்கான மத ரீதியான சுற்றுலா மாத்திரமன்றி ஏனைய சுற்றுலாப் பயணங்களும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

அதேவேளை எதிர்வரும் இரு வார காலத்தில் பாகிஸ்தானின் வர்த்தக மற்றும் முதலீட்டுச் சபைகளைச் சேர்ந்த உயர்மட்டக் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு உலகமும் முடங்கியிருக்கும் நிலையில் இடம்பெறும் இந்த விஜயமானது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகளின் மேம்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று குறிப்பிட்டார்.

மேலும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் வெகுவாக சீனாவின் ஆதிக்கத்திற்கு உட்படும் போக்கு காணப்படுகின்றமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த உயர்ஸ்தானிகர், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு என்பது, அந்நாடுகளினால் அவ்வுறவு எவ்வாறு கையாளப்படுகின்றது என்பதிலேயே தங்கியிருக்கின்றது.

எந்தவொரு நாட்டுடனுமான இரு தரப்பு உறவின்போது அந்தந்த நாடுகள் தமது இறையாண்மை மற்றும் சுயாதீனத்துவம் ஆகியவற்றை விட்டுக் கொடுக்காத வகையிலான கொள்கைகயைப் பேணும்பட்சத்தில் எவ்வித சிக்கல்களும் ஏற்படாது.

தேர்தல்களின் ஊடாக எமது நாடுகளின் தலைவர்களை நாமே தெரிவு செய்திருக்கின்றோம். ஆகவே அவர்கள் எமது நாட்டிற்கு சிறந்ததையே செய்வார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பொறுப்பை அவர்களிடம் கையளிப்போம் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment