முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அஷ்ரப் திடீர் இடமாற்றம் - News View

Breaking

Post Top Ad

Thursday, July 22, 2021

முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அஷ்ரப் திடீர் இடமாற்றம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சில தினங்களாக பெரும் பிரச்சினையாக பூதாகரம் எடுத்திருந்த பள்ளிவாசல்களில் குர்பானுக்கு தடை விதிக்கும் வகுப் சபையின் உத்தரவை அறிவித்த, முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.பீ.எம். அஷ்ரப், இன்று (22) திடீரென அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக இப்பதவியை வகித்த அஷ்ரபின் இடத்துக்கு திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் அன்வர் அலி பதில் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வகுப் சபையின் தீர்மானத்தை வகுப் சபையின் சட்டப்படி அறிவிக்கின்ற பொறுப்பு முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளருக்கே இருக்கின்றது. இதன்படி சில தினங்களுக்கு முன்பு குர்பானை நிறைவேற்றுவதற்கு பள்ளிவாசல்களை பயன்படுத்தக்கூடாது என அறிக்கை ஒன்றை விடுத்திருந்தார். 

இந்த அறிக்கை விடுக்கப்பட்டது குறித்து பெரும் எதிர்ப்புகள் நாடளாவிய ரீதியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில் முஸ்லிம்கள் பெரும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். பல இடங்களில் முஸ்லிம்கள் அறுக்கப்பட இருந்த மாடுகளைக் கூட பொலிஸார் கைது செய்த சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன.

இதையடுத்து அரச ஆதரவு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அஷ்ரபுக்கு எதிராக முறைப்பாடுகளை பிரதமரிடம் செய்திருந்தனர். இந்த முறைபாடுகளை அடுத்து இன்று (22) நண்பகல் அவர் திணைக்களத்தில் இருக்கும் போதே அவருக்கான இடமாற்றக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது.

குர்பானுக்கு தடையில்லை என்ற உத்தரவை அறிவித்திருந்த பிரதமரின் இணைப்புச் செயலாளர் அப்துல் சத்தார், சம்பந்தப்பட்ட அதிகாரிகரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்த பின்னணியிலே அஷ்ரப் இடமாற்றப்பட்டிருக்கின்றார்.

புத்தசாசனம் மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் கபில குணவர்தன அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இடமாற்றம் கோரி விடுக்கப்பட்டிருந்த விண்ணப்பத்திற்கு ஏற்ப உங்களுக்கு இந்த இடமாற்றம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தபால் அமைச்சின் பணிப்பாளராக பணிபுரிந்த அஷ்ரப், 2019 ஜனவரி மாதம் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளராகப் பதவியேற்றார். 

இவர் இலங்கை நிர்வாக சேவையின் மூத்த உத்தியோகஸ்தர்களில் ஒருவராவார். அநுராதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர், ஜாமிஆ நளீமியாவின் பட்டதாரியுமாவார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad