சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக 800 மில்லியன் டொலர் நிதியுதவி - எரிபொருள் விலையை குறைப்பதென்பது சிக்கலானது : அஜித் நிவார்ட் கப்ரால் - News View

About Us

About Us

Breaking

Monday, July 12, 2021

சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக 800 மில்லியன் டொலர் நிதியுதவி - எரிபொருள் விலையை குறைப்பதென்பது சிக்கலானது : அஜித் நிவார்ட் கப்ரால்

(இராஜதுரை ஹஷான்)

நாட்டின் பொருளாதார இயலுமையை வலுப்படுத்திக் கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக 800 மில்லியன் அமெரிக்க டொலர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் கிடைக்கப் பெறவுள்ளதாக நிதி மூலதனச்சந்தை இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பூகோளிய மட்டத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக தாக்கத்தை கருத்திற் கொண்டு சர்வதேச நாணய நிதியம் தனது உறுப்பு நாடுகளுக்கு 650 பில்லியன் அமெரிக்க டொலரை நன்கொடை அடிப்படையில் வழங்க தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கைக்கும் அந்நிவாரண நிதி கிடைக்கப் பெறவுள்ளது.

உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள வேளையில் சர்வதே நாணய நிதியம் தனது உறுப்பு நாடுகளுக்கு இவ்வாறு நிவாரண அடிப்படையில் நிதி வழங்குவது வழமையானது. இதனடிப்படையில் 510 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஏற்கனவே கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்நிதியை நாட்டின் பொருளாதார இயலுமையை மேம்படுத்துவதற்காகவும், தற்போதைய நெருக்கடி நிலையினை வெற்றிக் கொள்வதற்காகவும் பயன்படுத்திக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில் இருந்து நேற்று வரையில் சர்வதேச சந்தையில் ஒரு எரிபொருள் தாங்கியின் விலை 10 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் எரிபொருளில் விலையை குறைப்பதென்பது சிக்கலானது.

தேசிய பொருளாதாரத்தில் இயலுமையை மேம்படுத்தும் நோக்கில் எரிபொருளின் விலை கடந்த மாதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்ட காலத்திலும் கடந்த 21 மாத காலமாக எரிபொருளின் விலை அதிகரிக்கப்படவில்லை. நெருக்கடியான சூழ்நிலையிலும் நாட்டு மக்களுக்கு எரிபொருள் விலை குறைப்பின் ஊடாக நிவாரணம் வழங்கப்பட்டது என்றார்.

No comments:

Post a Comment