இணையத்தளத்தின் ஊடாக 15 வயது சிறுமி விற்பனை விசாரணைகள் இடைநிறுத்தப்படக்கூடாது, கைது செய்யப்பட்டவர்கள் எதனடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்கள்? - ரோஹினி கவிரத்ன - News View

Breaking

Post Top Ad

Monday, July 12, 2021

இணையத்தளத்தின் ஊடாக 15 வயது சிறுமி விற்பனை விசாரணைகள் இடைநிறுத்தப்படக்கூடாது, கைது செய்யப்பட்டவர்கள் எதனடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்கள்? - ரோஹினி கவிரத்ன

(நா.தனுஜா)

நாடளாவிய ரீதியில் மிக முக்கிய பேசு பொருளாக மாறியிருக்கின்ற இணையத்தளத்தின் ஊடாக 15 வயது சிறுமியொருவர் விற்பனை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பலர் அடையாளங்காணப்பட்டிருக்கும் நிலையில், இவ்வழக்கு விசாரணைகள் நிறுத்தப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடைநிறுத்தப்படக்கூடாது. அதுமாத்திரமன்றி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நால்வரும் எதனடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்கள்? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுமாத்திரமன்றி தேசிய பாதுகாப்பென்பது வெறுமனே இராணுவ ரீதியான பாதுகாப்பை மாத்திரமல்ல. மாறாக இந்நாட்டில் வாழும் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்துப் பொதுமக்களினதும் பாதுகாப்பை உள்ளடக்கியது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, அண்மையில் நாடளாவிய ரீதியில் மிக முக்கிய பேசு பொருளாக மாறியிருக்கின்ற இணையத்தளத்தின் ஊடாக 15 வயது சிறுமியொருவர் விற்பனை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பலர் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில், இவ்வழக்கு விசாரணைகள் நிறுத்தப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடைநிறுத்தப்படுமானால், பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் அதற்கு நாம் கடுமையான எதிர்ப்பை வெளியிடுகின்றோம்.

அதுமாத்திரமன்றி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நால்வரும் எதனடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்கள் என்றும் கேள்வியெழுப்ப விரும்புகின்றோம். பணத்திற்கு அடிபணிந்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்களா? அல்லது உயர்மட்டத்திலிருந்து கிடைத்த உத்தரவின் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்பட்டார்களா?

தேசிய பாதுகாப்பென்பது வெறுமனே இராணுவ ரீதியான பாதுகாப்பை மாத்திரமல்ல. மாறாக இந்நாட்டில் வாழும் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்துப் பொதுமக்களினதும் பாதுகாப்பை உள்ளடக்கியதாகும்.

அடுத்ததாக க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர் தரப் பரீட்சைகளுக்கான திகதிகள் தொடர்பான தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது.

அவ்வாறெனில் இதுவரையான காலப்பகுதியில் அப்பரீட்சைகளுக்குரிய பாடவிதானங்கள் அனைத்தும் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா? இணைய வழிக் கல்விச் செயற்பாடுகளின் ஊடாகக் கற்பிக்கப்பட்ட பாடங்களை அடிப்படையாகக் கொண்டு பரீட்சைகளை நடாத்தப் போகின்றார்களா? அவ்வாறெனின் அதனை உரியவாறு பெற்றுக் கொள்ள முடியாமல்போன மாணவர்களின் நிலையென்ன? இவ்வாறான சூழ்நிலையில் பரீட்சைகளை நடத்துவதால், முதற்தடவையாகப் பரீட்சைக்குத் தோற்றுகின்ற மாணவர்களுக்குப் பாரிய அநீதி இழைக்கப்படுகின்றது.

அதுமாத்திரமன்றி நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து ஆசிரியர்களும் இணைய வழி மூலமான கற்பித்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தியிருக்கின்றார்கள். இதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் ஆசிரியர் சங்கமும் ஆதரவளித்துள்ளது.

ஏனெனில் இதுவரையான காலப்பகுதியில் ஆசிரியர்களுக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டவற்றில் அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுக்கப்பட்ட வசதிகள் என்ன? வீதிகளில் இறங்கிப் போராடும் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுக்கும் எதிராக அடக்குமுறையைப் பிரயோகிக்கும் அரசாங்கத்திடம் இந்தக் கேள்விக்கு பதில் இருக்கின்றதா?

அதேபோன்று இணைய வழிக் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஒரு ஆசிரியரை மாத்திரம் கொண்டிருத்தல் போதுமானது என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கூறுகின்றார்.

அவர் மழைக்காகவது பாடசாலைக்கு அருகில் ஒதுங்கியிருப்பாரா என்று தெரியவில்லை. அவருக்குத் தெரிந்த பொலிஸ் மற்றும் சிறைச்சாலை விவகாரங்கள் தொடர்பில் மாத்திரம் கருத்து வெளியிடுமாறு திலும் அமுனுகமவிடம் கேட்டுக் கொள்கின்றோம். மாறாக அவரறியாத கல்விக் கட்டமைப்பில் அநாவசியமாகத் தலையீடு செய்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad