ஊடகவியலாளர் சமூகத்திடமும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடமும் மன்னிப்புக்கோர வேண்டும் : வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்திற்கு எதிராக ஊடக அமைப்புகள் போர்க்கொடி - News View

Breaking

Post Top Ad

Monday, June 7, 2021

ஊடகவியலாளர் சமூகத்திடமும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடமும் மன்னிப்புக்கோர வேண்டும் : வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்திற்கு எதிராக ஊடக அமைப்புகள் போர்க்கொடி

(நா.தனுஜா)

நாட்டில் கடந்த காலங்களில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களில் பெரும்பாலானோர் அடிமட்ட (தேர்ட் கிளாஸ்) ஊடகவியலாளர்களேயாவர் என்று வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்தினால் வெளியிடப்பட்ட கருத்திற்கு, ஊடகவியலாளர் சமூகத்திடமும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பத்தினரிடமும் அவர் மன்னிப்புக்கோர வேண்டும் என பல்வேறு ஊடக அமைப்புக்கள் ஒன்றிணைந்து வலியுறுத்தியுள்ளன.

நாட்டில் கடந்த காலங்களில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களில் பெரும்பாலானோர் அடிமட்ட (தேர்ட் கிளாஸ்) ஊடகவியலாளர்களேயாவர். எனவே அத்தகைய அடிமட்ட ஊடகவியலாளராக இருக்க வேண்டாம் என்று சுகாதார அமைச்சின் ஊடாகப் பேச்சாளர் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் வெளியிட்ட கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அவரது இந்தக் கருத்தைக் கண்டித்து ஊடக சேவை தொழிற்சங்க சம்மேளனம், சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை தொழில்சார் ஊடகவியலாளர்களின் சங்கம், இலங்கை முஸ்லிம் ஊடக அமையம், தமிழ் ஊடக அமையம் மற்றும் இலங்கை இளம் ஊடகவியலாளர்களின் சங்கம் ஆகிய ஊடக அமைப்புக்கள் ஒன்றிணைந்து வைத்தியநிபுணர் ஹேமந்த ஹேரத்திற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளன.

அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு நாட்டில் கடந்த காலங்களில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களில் பெரும்பாலானோர் 'தேர்ட் கிளாஸ்' ஊடகவியலாளர்கள் என்றவாறு நீங்கள் வெளிப்படுத்திய கருத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அதேவேளை நாட்டிற்கும் மக்களுக்கும் இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பில் வெளிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டமையினால், தமது உயிரைத் தியாகம் செய்யும் நிலைக்குத்தள்ளப்பட்ட ஊடகவியலாளர்களை நீங்கள் அவமதித்திருக்கிறீர்கள்.

வரலாற்றில் ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதி வழங்கப்படாத நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த நடவடிக்கைகளை நிறுத்தும் நோக்கில் திட்டமிட்டு அவர்களுக்கு எதிரான அநீதி இழைக்கப்பட்டமையே இன்னமும் அவற்றுக்கான நீதி நிலைநாட்டப்படாமைக்குக் காரணம் என்று நாங்கள் நம்புகின்றோம்.

கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட நீங்கள், அதில் பேசப்பட்ட விடயங்களுடன் சம்பந்தப்படாத விடயம் குறித்து தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர் ஒருவரை இலக்கு வைத்தே கோபத்துடன் இத்தகைய கருத்தை வெளியிட்டதாகக் கூறப்படுகின்றது.

எது எவ்வாறெனினும், சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் என்ற பதவியை வகிக்கும் நீங்கள், அநீதிகளால் உயிரிழந்த ஊடகவியலாளர்களுக்குச் செய்த பாரிய அவமதிப்பை சாதாரணமாகக் கருதிவிட முடியாது.

அநீதிகளுக்கு இலக்கான ஊடகவியலாளர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காகத் தொடர்ந்து போராடி வரும் ஊடக சமூகமும், அந்த ஊடகவியலாளர்களின் குடும்பத்தினரும் உங்களுடைய கருத்தினால் கடுமையான மனவேதனைக்குள்ளாக நேர்ந்திருக்கிறது.

உங்களுடைய கருத்து தொடர்பில் விவாதமொன்றுக்குச் செல்வதை நாம் விரும்பவில்லை. எனினும் உங்களுடைய கருத்தினால் மனவேதனைக்கு உள்ளாகியிருக்கும் ஊடக சமூகத்திடமும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பத்தினரிடமும் மன்னிப்புக் கோருவது பொறுப்பு வாய்ந்த அதிகாரி என்ற அடிப்படையில் நீங்கள் செய்ய வேண்டிய காரியம் என்று நாங்கள் நம்புகின்றோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad