சீனாவின் அரசியல் தலைமைத்துவத்தின் நம்பிக்கையை இலங்கை சம்பாதித்துள்ளது, இந்த நெருக்கத்தை வர்த்தக, முதலீட்டு வாய்ப்புக்களை நோக்கித் திருப்ப வேண்டிய தருணமிது - கலாநிதி பாலித கொஹன - News View

Breaking

Post Top Ad

Thursday, June 10, 2021

சீனாவின் அரசியல் தலைமைத்துவத்தின் நம்பிக்கையை இலங்கை சம்பாதித்துள்ளது, இந்த நெருக்கத்தை வர்த்தக, முதலீட்டு வாய்ப்புக்களை நோக்கித் திருப்ப வேண்டிய தருணமிது - கலாநிதி பாலித கொஹன

(நா.தனுஜா)

இலங்கைக்கும், சீனாவிற்கும் இடையில் மிகவும் ஆரோக்கியமானதும் நெருக்கமானதுமான நல்லுறவு காணப்படுகின்றது. சீனாவின் அரசியல் தலைமைத்துவத்தின் நம்பிக்கையை இலங்கை சம்பாதித்திருக்கிறது. ஆகவே இந்த அரசியல் நெருக்கத்தை வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களை நோக்கித் திருப்ப வேண்டிய தருணம் இதுவாகும். எனவே குறுகிய அரசியல் நலன்களுக்காக சீன முதலீட்டாளர்களுக்குத் தவறான சமிக்ஞைகளை வெளிப்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று சீனாவிற்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி பாலித கொஹன தெரிவித்துள்ளார்.

இலங்கை முதலீட்டுச் சபை, இலங்கை வர்த்தகப் பேரவை மற்றும் கொழும்புப் பங்குச்சந்தை ஆகியவற்றின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான இலங்கை முதலீட்டுப் பேரவை மாநாட்டின் மூன்றாம் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு நேற்று முன்தினம் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தை சீனா கொண்டிருக்கின்றது. அதுமாத்திரமன்றி 2030 ஆம் ஆண்டிற்கு முன்பதாக சீனா மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக வளர்ச்சியடையும் என்று உலக வங்கி கணிப்பிட்டுள்ளது.

800 மில்லியன் என்ற நடுத்தர வர்க்கத்தினரின் சனத் தொகையை உயர்வாகக் கொண்ட நாடு சீனாவாகும். சீனா மிகப்பாரிய சந்தையையும் நம்பமுடியாதளவிற்கு பெருமளவான பொருட்களையும் கொண்டிருக்கிறது. இது எமது நாட்டின் ஏற்றுமதியாளர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமைகின்றது.

அதுமாத்திரமன்றி உலகில் உள்ள அநேகமான உலக நாடுகளில் வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்குப் பங்களிப்புச் செய்யும் நாடாகவும் சீனா விளங்குகின்றது. அமெரிக்காவில் 145 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நிதியை சீனா முதலீடு செய்திருக்கின்றது. அதேபோன்று கடந்த 20 வருட காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் சுமார் 120 பில்லியன் யூரோ நிதியை முதலிட்டிருக்கிறது.

மேலும் 2016 ஆம் ஆண்டாகும்போது அவுஸ்திரேலியாவில் சீனாவினால் மேற்கொள்ளப்பட்ட முதலீடானது 16.5 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களைக் கடந்திருக்கின்றது.

எனவே உலகளாவிய ரீதியில் வணிக மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களை எதிர்பார்க்கின்ற எந்தவொரு நாட்டிற்கும் சீனா மிகப்பொருத்தமான நாடாகும்.

எனினும் அண்மைக் காலத்தில் நிதி வெளிப்பாய்ச்சல்கள் தொடர்பில் சீனா புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றது. அதேவேளை வெளிநாடுகளில் முதலீடுகளை மேற்கொள்ளும்போது சீனா பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதுடன் அவதானத்துடனும் செயற்படுகின்றது.

இலங்கைக்கும், சீனாவிற்கும் இடையில் இருக்கின்ற தொடர்பு என்ன? இரு நாடுகளுக்கும் இடையில் மிகவும் ஆரோக்கியமானதும் நெருக்கமானதுமான நல்லுறவு காணப்படுகின்றது.

சீனாவின் அரசியல் தலைமைத்துவத்தின் நம்பிக்கையை இலங்கை சம்பாதித்திருக்கிறது. ஆகவே இந்த அரசியல் நெருக்கத்தை வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களை நோக்கித் திருப்ப வேண்டிய தருணம் இதுவாகும்.

எனவே இலங்கையில் முதலீடு செய்வதற்கு சீன முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் அதேவேளை, அந்த முதலீடுகள் தொடர்ந்து நிலைத்திருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

குறுகிய அரசியல் நலன்களுக்காக சீன முதலீட்டாளர்களுக்குத் தவறான சமிக்ஞைகளை வெளிப்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

எந்தவொரு முதலீட்டாளர்களும் அரசியல் ரீதியில் மாற்று நிலைப்பாடுகளைக் கொண்ட, உண்மைகளைத் திரித்துக்கூறும் நாடுகளிடம் முதலீடு செய்வதற்கு விரும்பமாட்டார்கள்.

முதலீடுகளைச் செய்வதற்கென சீனாவிற்கு இருக்கக்கூடிய ஒரேயொரு தெரிவு இலங்கை அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மாறாக இலங்கையில் முதலீடு செய்வதற்கு சீனா கவரப்பட்டிருக்கிறது.

அதேவேளை இலங்கையில் முதலீடுகளைச் செய்யும் முதலீட்டாளர்கள் சட்டதிட்டங்களின் பிரகாரம் செயற்படுவதை சீனா உறுதிப்படுத்த வேண்டும். எமது நாட்டின் அரசியலமைப்பின் ஊடாகவும் அத்தகைய முதலீட்டுப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் உரிமைகளை உறுதிசெய்யக் கூடிய அளவிற்கு இலங்கையின் சட்டமுறைமை வலுவானதாக உள்ளது. 

அதேபோன்று கொழும்புத் துறைமுக நகரத்தில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு, தற்போது இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள துறைமுக நகர ஆணைக்குழு சட்டத்தின் மூலம் உயர் பாதுகாப்புக் கிடைக்கின்றது. சீனாவின் இரு பெருநிறுவனங்களினாலேயே கொழும்புத் துறைமுகநகரம் நிர்மாணிக்கப்பட்டது.

மேலும் இலங்கையும் குறிப்பிடத்தக்க அளவிலான கைத்தொழில் வலயங்களை ஸ்தாபித்திருப்பதுடன் அதில் அம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்தைக் குறிப்பிட்டுக்கூற முடியும்.

சுற்றுலாத் துறைசார் முதலீடுகளுக்கு மிகவும் பொருத்தமான தளமாகவும் இலங்கை காணப்படுகின்றது. இலங்கையானது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துகொண்டிருக்கிறது என்பதும் இங்கு முதலீடுசெய்ய முன்வருபவர்களுக்கு வாய்ப்பாக அமையும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad