புத்தளம் அரபுக் கல்லூரி ஆசிரியர்கள் சார்பில் சுமந்திரன் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 9, 2021

புத்தளம் அரபுக் கல்லூரி ஆசிரியர்கள் சார்பில் சுமந்திரன் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம்

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் குறித்ததான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இரு மெளலவி ஆசிரியர்கள் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

கைது, தடுத்து வைப்புக்கு எதிராக 26, 27 வயதுகளையுடைய மொஹம்மட் ஜவ்பர் லுக்மான் ஹகீம், மொஹம்மட் நசுருத்தீன் மொஹம்மட் வசீர் ஆகிய மெளலவி ஆசிரியர்கள் இந்த மனுவை, சட்டத்தரணி பாலசூரிய ஊடாக தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்று அம்மனு இரு நீதியரசர்கள் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

இதன்போது, மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜரானதுடன், பொறுப்புக் கூறத்தக்க தரப்பாக பெயரிடப்பட்டிருந்த சி.ஐ.டி. பிரதானி, பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டவர்கள் சார்பில் சிரேஷ்ட அரச சட்டவாதி கலாநிதி அவந்தி பெரேரா ஆஜரானார்.

இதன்போது பொறுப்புக் கூறத்தக்க தரப்பாக பெயரிடப்பட்டுள்ளவர்களிடம் இது குறித்து ஆலோசனையைப்பெற வேண்டும் எனவும் அதற்காக கால அவகாசம் தருமாறும் சிரேஷ்ட அரச சட்டவாதி அவந்தி பெரேரா கூரினார். இதனை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம் மனு மீதான பரிசீலனைகளை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தது.

எவ்வறாயினும் நேற்றையதினம் குறித்த மனு தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆரம்ப விளக்கம் ஒன்றினை மன்றில் முன்வைத்தார்.

இதனை ஆராய்ந்த நீதி மன்றம், அவ்விருவரையும் கொழும்புக்கு அருகிலோ அல்லது சட்டத்தரணிகளுடன் இலகுவில் தொடர்புகொள்ள முடியுமான சூழலையோ சிறைச்சாலை நிர்வாகத்துடன் கதைத்து ஏற்படுத்திக் கொடுக்குமாறு ஆலோசனை வழங்கியது.

எனினும் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டவாதி அது தொடர்பில் நீதிமன்ற உத்தரவொன்றினை கோரிய நிலையில், ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் கோரிக்கையை அப்படியே ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம், சட்டமா அதிபர் கோரிய உத்தரவை பிறப்பித்தது.

No comments:

Post a Comment