மக்கள் நலனை முன்னிறுத்திய சட்ட ரீதியான செயற்பாடுகளுக்கே அனுமதி - பூநகரியில் அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம் - News View

Breaking

Post Top Ad

Saturday, June 5, 2021

மக்கள் நலனை முன்னிறுத்திய சட்ட ரீதியான செயற்பாடுகளுக்கே அனுமதி - பூநகரியில் அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்

கடற்றொழில் செயற்பாடுகளை பாதிக்காத வகையில் கடற்றொழிலாளர்கள் மத்தியில் ஏற்படும் முரண்பாடுகள் பக்கச்சார்பின்றி தீர்த்து வைக்கப்படும் என்று தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் நலனை முன்னிறுத்திய சட்ட ரீதியான செயற்பாடுகள் மாத்திரமே அனுமதிக்கப்படும் எனவும் அரசியல் நலன் கொண்ட முனைப்புக்கள் கணக்கிலும் எடுத்துக் கொள்ளப்படாது தெரிவித்துள்ளார்.

பூநகரி பிரதேச செயலகத்தில் இன்று (05.06.2021) கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே கடற்றொழில் அமைச்சர் குறித்த கருத்தினை தெரிவித்தார்.

பூநகரி பிரதேச கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

குறிப்பாக, வலைப்பாடு கடற்றொழிலாளர் சங்கத்தினை சேர்ந்த சுமார் 80 கடற்றொழிலாளர்கள் அனுமதியின்றி கடலட்டை பண்ணைகளை அமைத்துள்ள நிலையில், மேலும் 45 கடற்றொழிலாளர்கள் கடலட்டைப் பண்ணைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

இது தொடர்பாக கவனம் செலுத்திய கடற்றொழில் அமைச்சர், ஏற்கனவே பண்ணைகளை அமைத்துள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதிகள் வழங்கப்படும் எனவும், மேலதிகமாக அடையாளங் காணப்படுகின்ற இடங்களில் புதிய விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அதேபோன்று, எருமை தீவு பிரதேசத்தில் கடற்றொழிலில் ஈடுபடும் உரிமை தொடர்பான பிரச்சினையில் கவனம் செலுத்திய கடற்றொழில் அமைச்சர், தொடர்புபட்ட கிராம சேவகர் பிரிவுகளுடையே கலந்துரையாடலை நடாத்தி வரைபடங்களின் அடிப்படையில் விரிவாக ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

அடுத்ததாக, கிராஞ்சி சிறிமுருகன் கடற்றொழில் சங்கத்திற்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக கவனம் செலுத்திய கடற்றொழில் அமைச்சர், அனைத்து உறுப்பினர்களையும் அழைத்து புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்படுவதில் சமூக இடைவெளி மற்றும் சுகாதார சிக்கல்கள் ஏற்படும் என்பதனால், அதுதொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் ஆராய்ந்து சாத்தியமான வழியூடாக புதிய நிர்வாகம் தெரிவு செய்து தரப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இவ்வாறு பூநகரி பிரதேச கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சிகைள் தொடர்பாக கவனம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் அமைச்சராகத் தான், இருக்கும்வரை மக்களின் நலன்சார்ந்த அடிப்படையிலேயே முடிவுகளை எடுக்கப்படுமெனவும், எனினும் சம்மந்தப்பட்ட சட்டங்களுக்கு அமைவாகவே பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு, கடலட்டை பண்ணை உட்பட அனைத்து தொழில் நடவடிக்கைகளையும் மேற்கொள்வது எதிர்காலத்தில் தேவையற்ற அசௌகரியங்களை தவிர்க்கும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad