ஒட்சிசன் தேவையுடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : மரணங்களைக் கட்டுப்படுத்த தடுப்பூசி வழங்கல் முறையாக முன்னெடுக்கப்பட வேண்டும் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Friday, June 11, 2021

ஒட்சிசன் தேவையுடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : மரணங்களைக் கட்டுப்படுத்த தடுப்பூசி வழங்கல் முறையாக முன்னெடுக்கப்பட வேண்டும் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

(எம்.மனோசித்ரா)

நாட்டில் ஒட்சிசன் தேவையுடைய கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வியாழனன்று மாத்திரம் இவ்வாறு ஒட்சிசன் தேவையுடைய 800 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதேநிலைமை தொடருமாயின் அடுத்த இரு வாரங்களில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

எனவே எதிர்காலத்தில் பதிவாகக்கூடிய கொவிட் மரணங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கு வினைத்திறனான தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் செயலாளர் வைத்தியர் ஷெனால் பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், மே மாத்தில் நாளாந்தம் சுமார் 26 மரணங்கள் பதிவாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது மே மாதம் 31 ஆம் திகதியாகும் போது 38 ஆக உயர்வடைந்திருந்தமையை அவதானிக்க முடிந்தது. இதேவேளை ஜூன் மாதம் 10 நாட்களுக்குள் சுமார் 423 மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய நாம் தற்போது எந்தளவிற்கு அபாயமான நிலையில் இருக்கின்றோம் என்பது தெளிவாகிறது. இதன் மூலம் ஜூன் மாத்தில் நாளொன்றில் சுமார் 42 மரணங்கள் பதிவாகின்றமை மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை ஒட்சிசன் தேவையுடைய நோயாளர்களின் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரித்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை மாத்திரம் ஒட்சிசன் தேவையுடைய 800 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

மே மாதம் ஒட்சிசன் தேவை அதிகரித்துள்ள நாடுகள் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மே மாதத்தில் நோயாளர்களுக்கான ஓட்சிசன் தேவை நூற்றுக்கு 400 வீதத்தால் அதிகரித்துள்ளது.

எனவே எதிர்வரும் இரு வாரங்களில் மரணங்கள் பதிவாகும் வாய்ப்புக்கள் அதிகமாகும். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மரணங்களைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முறையாக முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் தடுப்பூசி வழங்கலில் முறையான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரியவில்லை.

அத்தோடு சைனோபார்ம் தடுப்பூசியானது அஸ்ட்ரசெனிகா தடுப்பூசியைப் போன்றதல்ல. எனவே முதல் கட்டமாக மாத்திரம் சைனோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கும் என்று கூற முடியாது. இரண்டாம் கட்டமாகவும் அதனைப் பெற்றுக் கொண்டால் மாத்திரமே முழுமையான பயனைப் பெற முடியும் என்றார்.

No comments:

Post a Comment