சிங்கள மக்களின் அபிமானத்தை வென்ற முன்னாள் அமைச்சர் யூ.எல்.எம்.பாரூக் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 24, 2021

சிங்கள மக்களின் அபிமானத்தை வென்ற முன்னாள் அமைச்சர் யூ.எல்.எம்.பாரூக்

கேகாலை மாவட்டத்தின் முதலாவது சிறுபான்மையின பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ராஜாங்க அமைச்சரும் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவருமான யூனூஸ் லெப்பே முஹம்மது பாரூக் இம்மாதம் 20ஆம் திகதி அகவை 80 இல் கால் பதித்தார்.

ருவன்வெல்லை பாராளுமன்ற உறுப்பினர், பின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், ஆர். பிரேமதாஸ அரசில் போக்குவரத்து ராஜாங்க அமைச்சர், இலங்கை மத்திய போக்குவரத்துச் சபை தலைவர் போன்ற முக்கிய பதவிகளை வகித்து தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற்று, இன்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டுவரும் பாரூக், சிங்கள - தமிழ் - முஸ்லிம் ஐக்கியத்தை கட்டி எழுப்பப் பாடுபட்ட முன்மாதிரி மீது அரசியல்வாதியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ருவன்வெல்லைப் பாராளுமன்ற உறுப்பினராக 1988 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் செய்து, பதவியேற்ற யூ.எல்.எம்.பாரூக், என்றும் எப்போதும் சாதாரண மக்கள் மத்தியில் வாழும் ஒரு சாமான்ய மனிதர் என்ற பெயரைப் பெற்றவராவார்.

கேகாலை மாவட்டத்தின் முதலாவது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வரலாற்று நிகழ்வினை இலங்கை அரசியல் வரலாற்றில் பதிய வைத்து ருவன்வெல்லைத் தொகுதி எம்.பி.யாகத் தெளிவான யூ.எல்.எம் பாரூக் உள்ளூராட்சி அரசியல் மூலம் அரசியல் அரங்கிற்கு பிரவேசித்தார்.

மறைந்த ஜனாதிபதி ஆர்.பிரேமதாச 1956ஆம் ஆண்டு இடது சாரிகளின் கோட்டையாகக் கருதப்பட்ட ருவன்வெல்லையில் போட்டியிட்ட போது பாரூக் 15 வயது இளைஞராவார். அன்று பிரேமதாசவினுடைய பிரதான அலுவலகம் பாரூக்கின் தந்தைக்குரிய ஒரு கட்டடத்திலே இயங்கியுள்ளது. இந்த அலுவலகத்துக்கு அடிக்கடி போய் வருவதன் மூலம் அரசியல் ஆர்வம் ஏற்பட்டு, பாடசாலை மாணவர் காலத்திலிருந்தே அரசியலிலீடுபடத் தொடங்கினார். முன்னாள் தொழில் அமைச்சரும் ருவன்வல்லை எம்.பி.யுமான பி.சீ.இம்புலானவுடன் நெருங்கிய உறவினை ஏற்படுத்தி, அவரது வழிகாட்டலுடன் ஐ.தே.க மூலம் நேரடியாக அரசியலில் பிரவேசித்தார்.

1964ஆம் ஆண்டு ருவன்வெல்லை கிராம சபைக்கு கன்னத்தோட்டை வட்டார ஐ.தே.க. அபேட்சகராகப் போட்டியிட்டார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவர் தனது மூத்த சகோதரர் லங்கா சமசமாஜ கட்சி சார்பில் போட்டியிட்ட யூ.எல்.எம். சாபியைத் தோல்வியுறச் செய்து, பாரூக் கிராம சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். அடுத்து நடைபெற்ற கிராம சபை தேர்தலிலும் பாரூக் போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அபேட்சகரை கட்டுப் பணத்துடன் தோல்வியுறச் செய்தார்.

வாழ்க்கையில் தொடர்ச்சியாக வெற்றியைப் பெற்று வந்த பாரூக், சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ருவன்வெல்லைத் தொகுதியின் ஐ.தே.க. மத்திய அமைப்பின் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சந்தர்ப்பங்களிலெல்லாம் வெற்றி பெற்றுத் தலைவரானார்.

1980 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட கேகாலை மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் போட்டியிட்டு, கேகாலை மாவட்ட அபிவிருத்தி சபையின் உறுப்பினராகப் பணிபுரிந்தார்.

1988ஆம் ஆண்டு ருவன்வெல்லைப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த தொழில் அமைச்சர் பி.சீ. இம்புலான ஊவா மாகாணத்தின் ஆளுநராக பதவியேற்றதனால் ஏற்பட்ட ருவன்வெல்லைத்தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு புதிய உறுப்பினர் ஒருவரைத் தெரிவு செய்வதற்காக ஐ.தே.க. தலைமையகத்தில் நேர்முகப்பரீட்சை நடைபெற்றது. 27 சிங்கள அபேட்சகர்களும் ஒரு முஸ்லிம் அபேட்சகரும் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றினர்.

ருவன்வெல்லைத் தொகுதியில் வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கை என்ன என்று அப்போதைய ஐ.தே.க. வின் பொதுச்செயலாளர் மறைந்த அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன கேள்வி எழுப்பினார். சுமார் 3000 முஸ்லிம்கள் என்று பாரூக் பதிலளித்தார்.

அதனையடுத்து ரஞ்சன் விஜேரத்ன எழுப்பிய கேள்வி அத்தொகுதியில் வாழும் சிங்கள மக்களது ஆதரவை உங்களால் பெற முடியுமா? என்பதாகும்.

ருவன்வெல்லை மக்கள் எனக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்பதே எனது நம்பிக்கை. என்னைப்பற்றி ருவன்வெல்லைத் தொகுதி கட்சி அமைப்புகளிடம் கேட்டுப்பாருங்கள் என்பது பாரூக் அளித்த பதில்.

இதன்படி கட்சி கிளை, இளைஞர், மாதர் அமைப்பு உத்தியோகத்தர்களிடையே இரகசிய வாக்கெடுப்பு கட்சித் தலைமையகத்தில் நடாத்தப்பட்டது. இத்தெரிவில் பாரூக் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்றார். இரண்டாமிடம் பெற்ற சிங்கள அபேட்சகருக்கு பாரூக்கிற்கு கிடைத்த வாக்குகளில் கால் வாசிக்கும் குறைவாகவே கிடைத்தது.

இதனுடன் ருவன்வெல்லை என்ற தொகுதியில் பெரும்பான்மை பௌத்தர்கள் வாழும் ஒரு தொகுதியில் முஸ்லிம் ஒருவரை பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பது குறித்து ஆங்காங்கே எதிர்ப்புகள் எழுந்தன. இறுதித் தீர்மானம் எடுக்கும் ஐ.தே.க. செயற்குழுக் கூட்டத்தில் இவ்விவகாரம் எழுப்பப்பட்ட போது அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ருவன்வெல்லை மக்கள் பாரூக்கினை விரும்புவதாயின் அவரை நியமிப்போம் என்று பதிலளித்தார். இதன்படி ஐ.தே.க. செயற்குழு பாரூக்கை ருவன்வெல்லை எம்.பி.யாக நியமிப்பதற்கு ஏகமனதாக முடிவு செய்தது. 1988.06.20 ஆம் திகதி பாரூக்கின் 47 ஆவது பிறந்த தினத்தன்று ருவன்வெல்லை எம்.பி.யாகச் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். 1989 பொதுத் தேர்தல் வரை ருவன்வல்லை எம்.பி.யாகப் பதவி வகித்த இவர், 1989ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசாரத் தேர்தல் முறை மூலம் கேகாலை மாவட்ட அபேட்சராகப் போட்டியிட்டு, மீண்டும் கேகாலை மாவட்ட எம்.பி. யானார். கலாநிதி என்.எம்.பெரேரா, பி.சீ. இம்புலான, அதாவுட செனவிரத்ன போன்ற தலைவர்கள் கூட இத்தொகுதியில் பெற்றுக்கொள்ளாத 17,000 பெரும்பான்மை வாக்குகளால் ருவன்வல்லைத் தொகுதி இத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மக்கள் ஆதரவு இவருக்கு இருப்பதென்பது நிரூபிக்கப்பட்டது.

1990ஆம் ஆண்டு போக்குவரத்து ராஜாங்க அமைச்சராகப் பதவியேற்ற பாரூக், போக்குவரத்துத் துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு காரணகர்த்தாவாக இருந்தார். போக்குவரத்து சேவைகளைப் பெறுவதில் பொதுமக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை நன்குணர்ந்த சாமானிய மனிதன் என்ற வகையில் டிப்போக்களுக்கும் புகையிரத நிலையங்களுக்கும் திடீர் விஜயங்களை மேற்கொண்டு, போக்குவரத்து சேவையில் காணப்படும் ஊழல், மோசடி, கவனயீனம், வீண்விரயம் போன்றவற்றைக் குறைப்பதற்கு பல நடவடிக்கைகளை எடுத்தார்.

டிப்போக்கள் பலவற்றின் ஊழியர்களை ஒன்று சேர்த்து பழுதடைந்துள்ள பஸ் வண்டிகளை சிரமதானம் மூலம் திருத்தி, சேவையிலீடுபடுத்தும் வேலை வாரத்தை அறிமுகப்படுத்தி டிப்போக்களில் மாதக்கணக்கில் தேங்கி நின்ற பஸ்கள் பாதையில் ஓட வழி செய்தார்.

வன்செயல் காரணமாக சீர்குலைந்திருந்த வடக்கு - கிழக்கு மாகாணத்தில் பஸ் சேவைகளைப் புனரமைக்கும் பொறுப்பு பாரூக்கிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம், மன்னார் தவிர்ந்த வடக்கு கிழக்கின் சகல இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களும் இவரது தலைமையிலே மக்கள் மயப்படுத்தப்பட்டது. பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இப்பகுதிகளுக்கு விஜயம் செய்து டிப்போக்களுக்கு புதிய பஸ் வண்டிகளையும் மற்றும் வசதிகளையும் வழங்கி, வடக்கு கிழக்கின் அநேக இடங்களில் இடைநிறுத்தப்பட்டிருந்த பஸ் சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு வழி செய்தார். மட்டக்களப்பு டிப்போ மக்கள் மயப்படுத்தப்படும் நிகழ்ச்சிக்குச் சென்றபோது இவர் போகும் பாதையில் கன்னி வெடி வைக்கப்பட்டு, மயிரிழையில் உயிர் தப்பினார். யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கில் தம் தொழிலை இழந்திருந்த இருநூற்றுக்கு மேற்பட்ட போக்குவரத்துத்துறை சார்ந்த தமிழ் - முஸ்லிம் ஊழியர்களுக்கு மீண்டும் நியமனம் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்.

கேகாலை மாவட்ட முஸ்லிம்களது கல்வி மற்றும் சமூகத் தேவைகளை நிறைவு செய்வதற்கு பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்தார். கேகாலை மாவட்ட முஸ்லிம் கல்வி அபிவிருத்தி சங்கத்தை ஏற்படுத்தி சப்ரகமுவ மாகாண சபை மூலம் கேகாலை மாவட்டத்திலுள்ள அநேக முஸ்லிம் பாடசாலைகள் எதிர்நோக்கிய கட்டடப் பிரச்சினைக்கு ஒரே வருடத்தில் தீர்வு பெற்றுக் கொடுத்தார். கன்னத்தோட்டை சுலைமானியாப் பாடசாலையை மத்திய கல்லூரியாகத் தரமுயர்த்தி 3 கோரளையிலே பல வசதிகள் நிறைந்த
பாடசாலையாக அதனை மாற்றினார். தனது தொகுதியிலுள்ள பெருந்தோட்டங்களின் அபிவிருத்தியிலும் விசேட கவனம் செலுத்திய இவர், பல தோட்டங்களுக்கு மின்சார வசதி, பாடசாலைகளுக்கு கட்டடம் போன்றவற்றை பெற்றுக்கொடுத்தார்.

அமைச்சராக, பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போதும் எவ்வித ஆடம்பரமோ, பெருமையோ இன்றி பழகும் பாரூக்கின் குணநலம் எல்லோராலும் வெகுவாகக் கவரப்பட்டுள்ளது. மக்களின் இன்ப துன்பங்களில் என்றும் பங்கு கொள்ளும் சிறப்பான குணம் பாரூக் இடம் காணப்படுகின்றது. இதனாலேயே இவர் ஐ.தே.க. 1994 தேர்தலில் தோல்வியைக் கண்ட போதும் 1989 இல் பெற்ற 39,000 வாக்குகளை விட, 1994 இல் 49,000 விருப்பு வாக்குகளைப் பெற்று மீண்டும் மாவட்ட எம்.பி.யானார்.

2000ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இவர், கட்சியின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிமுக்கு இடமளித்து, தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து நீங்கி கொண்டார். கேகாலை மாவட்டத்தில் இது முஸ்லிம்கள் போட்டியிடுவதிலுள்ள சிக்கலை எடுத்துக் கூறியதும் மேலும் பல வருடங்கள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டிய இவர், அமைப்பாளர் பதவியை விட்டுக் கொடுத்தார். அதன்பின் அவரது மகன் நிஹால் பாரூக், சப்ரகமுவ மாகாண சபைக்கு 2000ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். மாகாண சபை கலைக்கப்படும் வரை இவர் மாகாணசபைத் தேர்தலில் மூன்று முறை போட்டியிட்டு, வெற்றி பெற்றார், இவரது தொடர் வெற்றிக்கு தந்தைக்கு பிரதேச சிங்கள மக்கள் மத்தியிலிருந்த தொடர் செல்வாக்கே காரணம் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

பாரூக், தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற்ற போதும் தனது பெயரில் ஒரு மன்றத்தை உருவாக்கி, மாவட்டத்தின் வசதி வாய்ப்புக் குறைந்த மக்களது மேம்பாட்டுக்காக உதவி வந்தார். யூ.எல்.எம்.பாரூக் மன்றம் மூலம் வருடாவருடம் பிரதேசத்தின் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உதவுவது ஒரு சிறப்பம்சமாக இருந்தது.

இவரது சேவையைப் பாராட்டி மாவட்ட மக்கள் அஸ்கிரிய பீடத்தில் சங்க நாயக்கர்களுக்குள் ஒருவரான வேந்தல் விகாராதிபதி ஆரியாலே ஆரியவங்ச தேரர் தலைமையில் பல கட்சித் தலைவர்களது பிரசன்னத்துடன் ஒரு பொதுப் பாராட்டு விழாவினை நடாத்தி ஏழு தசாப்தங்களுக்கு மேலாக தம் பிரதேசத்திற்கு ஆற்றிய சேவைக்கு நன்றி தெரிவித்தனர்.

அகவை 80 இல் கால் பதித்துள்ள முன்னாள் அமைச்சர் சுக தேகியாக வாழப் பிரார்த்திப்போம்.

என்.எம்.அமீன்

1 comment:

  1. An interesting article about Appa!
    Thank you! Chief Editor of Navamani Mr N.M Ameen, for penning down this worth article. Also for recalling Appa's historical days. And Heartfully remembering your tenure as Appa's personal Assistant for a long period. Thank you again for your being an  enormous supporter and a strength to Appa!!
    Highly appriciated! Thank you!!!

    ReplyDelete