கல்முனை சுகாதார பிரிவில் நான்கு பிரிவுகள் அபாய வலயமாக பிரகடனம் : பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சுகுணன் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 24, 2021

கல்முனை சுகாதார பிரிவில் நான்கு பிரிவுகள் அபாய வலயமாக பிரகடனம் : பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சுகுணன்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் நான்கு சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகள் கொரோனாத் தொற்று அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ​டொக்டர் ஜி.சுகுணன் தெரிவித்தார்.

கொவிட்19 மூன்றாவது அலையின் தாக்கம் காரணமாக அட்டாளைச்சேனை, காரைதீவு, சம்மாந்துறை, நிந்தவூர் ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் அவதானத்திற்குரிய அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அப்பகுதிகளில் வாழும் பொது மக்கள் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறும் கேட்டுள்ளார்.

சம்மாந்துறை சுகாதார வைத்தியதிகாரி பிரிவிலுள்ள புதிய வளத்தாப்பிட்டி கிராம சேவகர் பிரிவு முடக்கப்பட்டுள்ளதாகவும், அப்பிரிவு விரைவில் விடுவிக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

கடந்த 24 மணித்தியாலத்தில் புதன்கிழமை (23) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 44 பேர் கொவிட்-19 தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும், இரண்டு பேர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 433 பேரும், அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 187 பேரும், பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 134 பேரும், இறக்காமம் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 123 பேரும், திருக்கோவில் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 49 பேரும், ஆலையடிவேம்பு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 74 பேரும், நிந்தவூர் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 174 பேரும், காரைதீவு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 196 பேரும், கல்முனை தெற்கு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 397 பேரும், கல்முனை வடக்கு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 167 பேரும், சம்மாந்துறை சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 224 பேரும், சாய்ந்தமருது சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 107 பேரும், நாவிதன்வெளி சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 84 பேருமாக மொத்தம் 2349 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

கல்முனைப் பிராந்தியத்தில் 39 ஆயிரத்தி 850 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மற்றும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கொரோனாத் தொற்றின் 02 வது அலையில் 11 பேரும், 03 வது அலையில் 24 பேருமாக மொத்தம் 35 பேர் மரணமடைந்துள்ளனர்.

கல்முனைப் பிராந்தியத்தில் இரு வாரங்களாக நாளாந்தம் தொடர்ச்சியாக கொரோனாத் தொற்றாளர்களின் வீதம் அதிகரித்து வருவதனால் பொது மக்கள் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும், தேவையில்லாமல் வெளியில் செல்ல வேண்டாமெனவும் அறிவித்துள்ளார்.

அபாய வலயங்களில் வாழும் பொது மக்கள் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறும் இதனை மீறுபவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஒலுவில் விசேட நிருபர்

No comments:

Post a Comment