வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் உடனடியாக பதவி விலக்கப்பட வேண்டும் - லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா - News View

Breaking

Post Top Ad

Monday, June 7, 2021

வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் உடனடியாக பதவி விலக்கப்பட வேண்டும் - லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா

(நா.தனுஜா)

நாட்டில் கடந்த காலங்களில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களில் பெரும்பாலானோர் அடிமட்ட (தேர்ட் கிளாஸ்) ஊடகவியலாளர்களேயாவர். எனவே அத்தகைய அடிமட்ட ஊடகவியலாளராக இருக்க வேண்டாம் என்று சுகாதார அமைச்சின் ஊடாகப் பேச்சாளர் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் வெளியிட்ட கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அவர் உடனடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க வலியுறுத்தியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது, ஊடகவியலாளர் ஒருவர் தடுப்பூசி தொடர்பில் கேள்வி எழுப்பிய சந்தர்ப்பத்திலேயே ஹேமந்த ஹேரத் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

'மக்களிடம் தகவல்களை கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டிய பாரிய பொறுப்பு ஊடகவியலாளர்களுக்கு இருக்கின்றது. ஆனால் இங்கு அடிமட்ட ஊடகவியலாளர்களும் (தேர்ட் கிளாஸ்) இருக்கின்றார்கள். கடந்த காலங்களில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் பெரும்பாலானோர் அத்தகைய அடிமட்ட (தேர்ட் கிளாஸ்) ஊடகவியலாளர்களேயாவர்.

எனினும் உயர்தரத்தைப் பேணுகின்ற, மதிக்கத்தக்க ஊடகவியலாளர்கள் எவ்வித இடையூறுகளையும் எதிர்கொள்வதில்லை என்று நான் குறிப்பிட மாட்டேன்' என்று ஹேமந்த ஹேரத் பேசிய காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளரின் இந்தக் கருத்துத் தொடர்பில் படுகொலை செய்யப்பட்ட, 'சண்டே லீடர்' பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார். அப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது,

ஊடகவியலாளர் ஒருவரைப் படுகொலை செய்வதற்கு எவ்வித நியாயப்படுத்தல்களையும் கூற முடியாது. எந்தவொரு நபரைக் கொல்வதற்கும் நியாயம் கற்பிக்க முடியாது. என்னுடைய தந்தையைப் போன்று கொல்லப்பட்டவர்கள் தொடர்பில் கோத்தாபய ராஜபக்ஷ அரசாங்கம் மகிழ்ச்சியடைகின்றது என்பதற்கு இந்தக் கருத்தும் ஓர் உதாரணமாகும். 

அதேவேளை வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் அவரது பதவியிலிருந்து உடனடியாக விலக்கப்பட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad