வீதிகளில் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் தேவையற்ற பயணங்கள் குறைவடையும் - சிரேஷ்ட பேராசியர் அர்ஜுன த சில்வா - News View

Breaking

Post Top Ad

Friday, June 4, 2021

வீதிகளில் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் தேவையற்ற பயணங்கள் குறைவடையும் - சிரேஷ்ட பேராசியர் அர்ஜுன த சில்வா

(எம்.ஆர்.எம்.வசீம்)

வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு வீதியிலேயே கொவிட் பரிசாேதனை மேற்கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றை விரைவாக ஆரம்பிக்க வேண்டும். இதன் மூலம் தேவையற்ற போக்குவரத்து நடவடிக்கைகள் வரையறுக்கப்படுவதுடன் தொற்றாளர்களை இனம் காண்பதற்கும் வாய்ப்பாக அமையும் என சிரேஷ்ட பேராசியர் அர்ஜுன த சில்வா தெரிவித்தார்.

நாட்டில் பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கின்ற போதும் தேவையற்ற பயணங்களில் மக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை கட்டுப்படுத்துவது தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், நாட்டில் தீவிரமாக பரவி வரும் கொவிட் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் பயணக் கட்டுப்பாட்டை விதித்திருக்கின்றது.

இருந்த போதும் அதிகமான மக்கள் இந்த காலப்பகுதியிலும் தேவையற்ற பயணங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பயணக் கட்டுப்பாட்டின் நோக்கத்தை அடைந்து கொள்ள முடியாமல் போகும் நிலை இருக்கின்றது.

அதனால் வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு வீதியிலேயே கொவிட் பரிசாேதனை மேற்கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றை விரைவாக ஆரம்பிக்க வேண்டும் என்ற யோசனையை அரசாங்கத்துக்கு தெரிவிக்கின்றேன்.

இவ்வாறான வேலைத்திட்டம் ஆரம்பிப்பதன் மூலம் தேவையற்ற பயணங்கள் பெரும்பாலும் குறைவடைவதுடன் தொற்றாளர்களை இனம் கண்டுகாெள்வதற்கும் வாய்ப்பாக அமைகின்றது.

மேலும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலத்தில் ஒரு சிலர் தேவையற்ற பயணங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது மிகவும் பிழையான நடவடிக்கையாகும்.

இந்த காலப்பகுதியில் கொவிட் பரிசோதனைகளை குறைக்கக் கூடாது. மாறாக நாட்டில் பயணக் கட்டுப்பாடு விதித்துள்ள இந்த காலப்பகுதியில் கொவிட் பரிசோதனைகளை மேற்கொள்வது இலகுவாகும்.

அதிகமான தொற்றாளர்களுக்கு நோய் அறிகுறிகள் காட்டுவதில்லை. அதனால் முடக்கப்பட்டிருக்கும் இந்த காலப்பகுதியை முடிந்தளவு பிரயோசனப்படுத்துவதற்கு பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். பி.சி.ஆர். மேற்கொள்ளாமல் நாட்டை முடக்குவதால் பூரண பிரயோசனத்தை பெற்றுக் கொள்ள முடியாது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad