ஆமைகள், டொல்பின் மற்றும் பவளப்பாறை சிதைவுகள் கரையொதுங்கின - News View

About Us

About Us

Breaking

Sunday, June 6, 2021

ஆமைகள், டொல்பின் மற்றும் பவளப்பாறை சிதைவுகள் கரையொதுங்கின

கடலாமை என்பது தனித்துவமானதும் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழக்கூடியதுமான விசேட உயிரினமாகும். அந்த ஆமைகளின் இனப்பெருக்கத்திற்கு மிகப் பொருத்தமான இடமாக எமது கடற்கரைப் பிரதேசம் திகழ்கின்றது.

தாய் கடலாமைகள் இடும் நூற்றுக்கணக்கான முட்டைகளிலிருந்து வெளிவந்து நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வாழும் சந்தர்ப்பம் ஒரு சில கடலாமைகளுக்கு மாத்திரமே கிடைக்கின்றது.

கடலாமைகள் பிறந்து மகிழ்ந்த எமது கடல் அவற்றின் மயானமாக மாறியுள்ளது. இன்றும் ஏழு கடலாமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.

இந்தப் பெறுமதியான உயிரினம் ஏன் இறக்கின்றது என்பது தொடர்பில் கடல்வாழ் உயிரின நிபுணர் துஷான் கபுருசிங்க கருத்துத் தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது, நச்சு இரசாயனம் கடலில் கலந்தவுடன் அதன் அடர்த்தி குறைவடையும் எனவும், அதன் தாக்கம் குறையும் எனவும் சிலர் வாதிடுகின்றனர். கடல் வாழ் உயிரின நிபுணர் என்ற வகையில் அதனை நிராகரிக்கின்றேன். நச்சு இரசாயனம் மூலம் கடலாமைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். நச்சுப் பதார்த்தங்கள் உடலுக்குள் அடங்கியுள்ள உயிரினங்களை இவை உணவாகக் கொண்டால், அவற்றையும் அந்த விஷம் சென்றடையும். அவ்வாறில்லாமல், கப்பலிலிருந்து வீழ்ந்தவற்றை நேரடியாக உணவாக உட்கொள்கின்றன என நான் இங்கு கூறவில்லை. இறுதியில் இது மனிதர்களிடையேயும் பரவலாம்

கொஸ்கொட கடற்கரையில் மூன்று கடலாமைகள் இன்று கரையொதுங்கின.

பயாகல வடக்கு கடற்கரையில் இறந்த நிலையில் கடலாமையொன்று இன்று முற்பகல் கரையொதுங்கியது.

தெஹிவளை கடற்கரையில் இறந்த கடலாமையொன்றும் கரையொதுங்கியது.

வாதூவ - தல்பிட்டி கடற்கரையிலும், அங்குலானை கடற்கரையிலும் இறந்த நிலையில் கடலாமைகள் கரையொதுங்கின.

இதேபோன்று, கடந்த சில தினங்களிலும் இறந்த நிலையில் கடலாமைகள் கரையொதுங்கின.

இதேவேளை, நாட்டின் கடற்கரைகளில் கரையொதுங்கிய கடலாமைகளின் இறப்பிற்கு, MV X-Press Pearl கப்பலில் இருந்த நச்சு இரசாயனப் பதார்த்தம் காரணமா என ஆராயப்படுவதாக சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்காக கடலாமைகளின் உடற்பாகங்கள் பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடைப் பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகார சபை கூறியுள்ளது.

இதேவேளை, இறந்த டொல்பின் ஒன்றின் உடல் இந்துருவ கடற்கரையில் இன்று கரையொதுங்கியது. இந்த டொல்ஃபின் சுமார் 4 அடி நீளமானது.

இந்த நிலையில், சுதுவெல்ல கடற்கரைப் பகுதியில் பவளப்பாறையின் சிதைவுகள் கரையொதுங்கியுள்ளன.

No comments:

Post a Comment