இலங்கையில் மாதமொன்றுக்கு 1,500 பேர் கொரோனாவால் உயிரிழக்கக் கூடும் - நாட்டை முடக்கச் சொல்வது மக்களின் பாதுகாப்புக்காகவே தவிர வைத்தியர்களின் தேவைக்கல்ல : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 23, 2021

இலங்கையில் மாதமொன்றுக்கு 1,500 பேர் கொரோனாவால் உயிரிழக்கக் கூடும் - நாட்டை முடக்கச் சொல்வது மக்களின் பாதுகாப்புக்காகவே தவிர வைத்தியர்களின் தேவைக்கல்ல : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

(எம்.மனோசித்ரா)

சமூகத்தில் நிலைமாறிய வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதை இனங்காண்பதற்கு எழுமாற்று பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவு அதிகரிக்கப்பட வேண்டும். அவ்வாறில்லையெனில் வைரஸ் பரவல் பாரதூரமான அபாயத்தை தோற்றுவிக்கும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே இவ்வாறு எச்சரித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாளாந்தம் 50 மரணங்கள் என்பது வழமையான ஒன்றைப் போன்று ஆகியுள்ளது. எனினும் இது துரதிஷ்டவசமானதாகும். அதற்கமைய மாதமொன்றுக்கு  சராசரியாக 1500 பேர் கொவிட் தொற்றால் உயிரிழக்கக் கூடும் என்று எதிர்பார்க்க முடியும். 

இவ்வாறான நிலையில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் மக்கள் செயற்படுகின்றமை மருத்துவதுறையினரான எமக்கு மிகவும் கவலைக்குரியதாகவுள்ளது. தற்போது கொவிட் பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதே தவிர, குறைவடையவில்லை. ஓட்சிசன் தேவையுடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. 

மக்கள் அபாயத்தை உணராமல் பொறுப்பற்று செயற்படுகின்றமையின் காரணமாகவே வைத்தியத்தியர்கள் தொடர்ந்தும் நாட்டை முடக்குகின்றனர். இந்த கோரிக்கை மக்களின் பாதுகாப்பிற்காக முன்வைக்கப்படுகின்றதே தவிர, வைத்தியர்களின் தேவைக்காக அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டில் தற்போது கொவிட் தொற்று எந்தளவிற்கு வியாபித்துள்ளது என்பதை இனங்காண்பதற்கு எழுமாற்று பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும். எழுமாற்று பரிசோதனைகளின் அளவை அதிகரிக்காவிட்டால் நிலைமாறிய புதிய வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய முடியாது. 

அத்தோடு தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதுடன் அடிப்படை சுகாதார விதிமுறைகளை பின்பற்றி மக்களும் ஒத்துழைப்பு வழங்கினால் மாத்திரமே மரணங்களின் எண்ணிக்கையையும் குறைத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்றார்.

No comments:

Post a Comment