கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தும் வரை கூட்டமைப்பு ஓயாது என்கிறார் அரியநேத்திரன் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 8, 2021

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தும் வரை கூட்டமைப்பு ஓயாது என்கிறார் அரியநேத்திரன்

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது என, அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகம் கடந்த 30, வருடங்களுக்கு மேலாக தரம் உயர்த்தப்படாமல் உப செயலகமாகவே இயங்கி வருகிறது. 

கடந்த ஆறு தடவைகள் பாராளுமன்ற பொதுத் தேர்தல்கள் இடம்பெற்று ஆட்சியமைத்த அனைத்து ஆட்சியாளர்களுக்கும் அப்போது இருந்த தமிழர் விடுதலை கூட்டணியாக இருக்கலாம் இப்போதுள்ள தமிழரசு, தேசியக் கூட்டமைப்பாக இருக்கலாம் தொடர்ச்சியாக கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தமை எல்லோருக்கும் தெரிந்த விடயமே.

ஆனால் சில இஸ்லாமிய அரசியல் தலைவர்களின் எதிர்ப்புகளாலும் பாராளுமன்ற வாக்கெடுப்புகளில் ஆட்சியாளர்களுக்கு ஆதரவு தேவைப்பட்டதாலும், கல்முனை தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் முயற்சி எடுத்தும் உதாசீனம் செய்து ஏமாற்றியதே வரலாறு.

கடந்த 2015 இல் ஆட்சியமைத்த நல்லாட்சி காலத்திலும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்வது தொடர்பாக என்றும் இல்லாத வகையில் பல முன்னேற்றங்களை கண்டிருந்தது. பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க வேண்டுமென்று இறுதி நேரத்தில் அதை செய்வதற்காக பூரண அதிகாரங்கள் இருந்த போதும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு நம்பிக்கையை ஊட்டி இறுதியில் நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டார் அதனால் அந்த அரிய வாய்ப்புகளும் இல்லாமல் போய்விட்டது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படவில்லை என்பதை கடந்த 2020, பொதுத் தேர்தலில் ஒரு பிரசாரமாக கையில் எடுத்த வினாயகமூர்த்தி முரளிதரன், அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வடக்கு செயலகத்தை கூட்டமைப்பு தரம் உயர்த்தக்கூடிய வாய்புகள் இருந்தும் அதனை நல்லாட்சி அரசில் முட்டுக்கொடுத்தவர்கள் செய்யவில்லை என பிரசாரங்களை முன்னெடுத்து அம்பாறை மாவட்ட தமிழ் பிரதிநித்துவத்தை இல்லாமல் செய்தார்.

தற்போது கூட்டமைப்பு கல்முனை பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவதற்கான அரசியல் ரீதியாக சம்பந்தப்பட்டவர்களுடன் அணுகி அதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் எடுத்துக்கொண்டே இருக்கிறது என்பதைச் சகலரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எனவே, கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக யார் எதை கதைத்தாலும், கல்முனை வடக்கு செயலகத்தை தரம் உயர்த்தும் பணியிலிருந்து கூட்டமைப்பு ஓயாது எனவும் மேலும் கூறினார்.

(மண்டூர் நிருபர்)

No comments:

Post a Comment