சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இந்தியர்கள் இலங்கைக்குள் வர திட்டம் : போலி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எதிர்தரப்பினர் அரசியல் இலாபம் தேடிக்கொள்வது வெறுக்கத்தக்கது - காஞ்சன விஜேகேசர - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 4, 2021

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இந்தியர்கள் இலங்கைக்குள் வர திட்டம் : போலி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எதிர்தரப்பினர் அரசியல் இலாபம் தேடிக்கொள்வது வெறுக்கத்தக்கது - காஞ்சன விஜேகேசர

இராஜதுரை ஹஷான்

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இந்தியர்கள் இலங்கைக்குள் வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவ்விடயம் குறித்து அதிக அவதானம் செலுத்துமாறு கடற்படையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என கடற்தொழில் துறைமுக அபிவிருத்தி, ஆள்கடல் பல நாள் கடற்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேகேசர தெரிவித்தார்.

மாத்தறை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கம் தீவிரமாகியுள்ள நிலையில் மீன்பிடி கைத்தொழில் நடவடிக்கைகளின் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பேலியகொட மீன் சந்தை கொத்தணி காரணமாக கடந்த காலங்களில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டது. எனவே மீன்பிடி கைத்தொழில் குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியர்கள் சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இலங்கைக்கு வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவ்விடயம் குறித்து அதிக கவனம் செலுத்துமாறு கடற்படையினருக்கும், துறைமுக திணைக்களத்திற்கும், கரையோர பாதுகாப்பு பிரிவினருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தாக்கம் நாட்டில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொவிட் வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்கு சிகிச்சை வழங்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக எதிர்தரப்பினர் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். நாட்டு மக்களை பாதுகாக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

நெருக்கடியான சூழ்நிலையில் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எதிர்தரப்பினர் அரசியல் இலாபம் தேடிக்கொள்ள முயற்சிப்பது வெறுக்கத்தக்கதாகும். அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து செயற்பட்டால் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையை வெற்றிக் கொள்ள முடியும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad