இரசாயன உரப் பயன்பாடு தடையால் தோட்டத் தொழிலாளர்களுக்கு பாதிப்பு - ஜனாதிபதி தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்கிறார் செந்தில் - News View

Breaking

Post Top Ad

Saturday, May 8, 2021

இரசாயன உரப் பயன்பாடு தடையால் தோட்டத் தொழிலாளர்களுக்கு பாதிப்பு - ஜனாதிபதி தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்கிறார் செந்தில்

இரசாயன உரப் பயன்பாடு தடை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ எடுத்துள்ள தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தடை உத்தரவால், ஏனைய துறைகள் எதிர்நோக்கும் பாதிப்பை விட, தேயிலைத் தொழிற்துறையே பெரும் பாதிப்பை எதிர்நோக்கும், இதனால், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேலை நாட்கள் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு இடம்பெறுமாயின், ஆயிரம் ரூபாய் நாள் சம்பள அதிகரிப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டமை பயனற்றதாகிவிடும்.

இரசாயன உரங்களைத் தேயிலைத் தோட்டங்களுக்கு போடும் பட்சத்திலேயே, அதிகளவு தேயிலைக் கொழுந்துகள் துளிர்விடத் தொடங்கும். அவ்வாறு கொழுந்து அதிகமாகக் காணப்படுவதால், தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்புகளும் எவ்வித மாற்றமுமின்றி வழங்கக்கூடியதாக இருக்கும்.

அத்துடன், ஒரு நாளைக்கு அவர்கள் பறிக்க வேண்டிய தேயிலைக் கொழுந்தின் அளவையும் நாள்தோறும் பறிக்கக்கூடியதாக இருக்கும்.

“மாறாக, இயற்கை உரத்தைப் பயன்படுத்தினால், இயற்கை உரம் பயன்பாட்டுக்கான சான்றிதழைப் பெற்றுக் கொள்ளவே, நான்கு ஆண்டுகளாகும். அத்துடன், கொழுந்து விளைச்சலும் மிகக் குறைவாகவே காணப்படும்.

அவ்வாறு விளைச்சல் குறைவாகக் காணப்படும் பட்சத்தில், தேயிலைத் தோட்டங்களைப் பராமரிப்பதில், பெருந்தோட்ட நிறுவனங்கள் பாரிய சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். இது, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பாதகமாக அமைந்துவிடும்.

“அது தவிர, இயற்கை உரத்தில் விளைச்சல் செய்யப்படும் தேயிலையின் விலை, தற்போது பெற்றுக் கொள்ளும் சாதாரண தேயிலையின் விலையை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

இதனால் எதிர்காலத்தில், சாதாரண மக்கள் தேயிலைப் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம். இவ்வாறிருக்கும் பட்சத்தில், அரசாங்கத்தின் இரசாயன உரம் தொடர்பான தீர்மானம், தேயிலைத் தோட்டச் செய்கைக்கு ஏற்றதாக இருக்காது.

அரசாங்கத்தின் இந்த முடிவில், தேயிலைத் தோட்டங்களின் உற்பத்தி மாத்திரமன்றி, மலையக மக்களின் வாழ்வாதாரமும் அடங்கியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad