சுகாதார வழிமுறைகளை மீறி யாழ். தேர்த் திருவிழா - ஆலய தலைவர், செயலாளர் கைதாகி பொலிஸ் பிணையில் விடுதலை - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 28, 2021

சுகாதார வழிமுறைகளை மீறி யாழ். தேர்த் திருவிழா - ஆலய தலைவர், செயலாளர் கைதாகி பொலிஸ் பிணையில் விடுதலை

யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள், ஆலயத்தில் கொவிட்-19 கட்டுப்பாட்டு விதிகளை மீறி தேர்த் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில் குறித்த ஆலயத்தின் தலைவர் மற்றும் செயலாளர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். நேற்றிரவு செவ்வாய்க்கிழமை (27) இக்கைது இடம்பெற்றது.

நாட்டில் கொவிட்-19 கட்டுப்பாட்டு சுகாதார விதிமுறைகளை மீறி ஆலயத் திருவிழாவை நடத்தியதன் மூலம் யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் பரவலை ஏற்படுத்த வழிசமைத்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய தலைவர், செயலாளர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கு நாளை வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவுள்ளது. அதற்கமைய, குறித்த இருவம் செவ்வாய்க்கிழமை இரவு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய வருடாந்திர தேர்த் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

அந்தக் காணொளி தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்டதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெனாண்டோவின் பணிப்பில் இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய, 50 பக்தர்களுக்கு மட்டுமே ஆலயத்தில் ஒரே நேரத்தில் வழிபட அனுமதிக்கப்படும் என சுகாதார அமைச்சின் சுற்றறிக்கை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(யாழ். விசேட நிருபர் - மயூரப்பிரியன்)

No comments:

Post a Comment

Post Bottom Ad