இலங்கையில் தற்போதைய கொரோனா தொடர்பான நிலைவரம் - விபரம் இதோ ! - News View

About Us

About Us

Breaking

Monday, April 26, 2021

இலங்கையில் தற்போதைய கொரோனா தொடர்பான நிலைவரம் - விபரம் இதோ !

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்று நிலைமை அதிகரித்துள்ள நிலையில் நாளை செவ்வாய்கிழமை முதல் அரச அலுவலகங்கத்திற்கு வரும் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பில் தலைமை அதிகாரிகளால் தீர்மானிக்கப்படக்கூடிய சுற்று நிரூபம் வெளியிடப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட 48 சுகாதார விதிமுறைகளில் தேவையேற்படின் அரச மற்றும் தனியார் அலுவலங்களில் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியும் என்று குறிப்பிடப்பட்டிருந்தமைக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள கொவிட் பரவல் நிலைமைக்கு அமைய மேல் மற்றும் வட மேல் மாகாணங்களே அதிக அவதானம் மிக்கவையாகக் காணப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஏனைய மாகாணங்களிலும் எதிர்வரும் தினங்களில் இவ்வாறு அபாய நிலைமை ஏற்படக்கூடும் என்று சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நாட்டில் 793 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்களில் கொழும்பில் 226 தொற்றாளர்களும், கம்பஹாவில் 82 தொற்றாளர்களும், குருணாகலில் 71 தொற்றாளர்களும், யாழ்ப்பாணத்தில் 61 தொற்றாளர்களும், களுத்துறையில் 52 தொற்றாளர்களும், வெளிநாடுகளிலிருந்து வந்த 10 பேரும் உள்ளடங்குகின்றனர்.

அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 1,379 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 94,311 பேர் குணமடைந்துள்ளதோடு, 6426 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

களனி பிரதேசத்தை சேர்ந்த 79 வயதுடைய பெண்ணொருவரும், பொலன்னறுவையை சேர்ந்த 73 வயதுடைய ஆணொருவரும் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அற்கமைய நாட்டில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 644 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை மீகஹாவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பிரிதொரு பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதால் மீகஹாவத்தை பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை பின்பற்றாமை தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 177 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹண தெரிவித்தார்.

திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட சகல பாடசாலைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுவதாக கிழக்கு மாகாண ஆளுனர் அறிவித்துள்ளார்.

அத்தோடு ஏற்கனவே நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த திருமண வைபவங்களை சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலானோரின் பங்களிப்புடன் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

மேலும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதில் ஏதேனும் மாற்று தீர்மானங்கள் எடுக்க வேண்டியேற்பட்டால் அது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தீர்மானிக்கப்படும் என்று விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் அழைத்து வரும் செயற்பாடுகள் வழமையைப் போன்று இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment