இஸ்லாமிய அறிஞர்களை தீவிரவாதிகளென முத்திரை குத்துவது கவலை தருகின்றது - மூத்த பிரமுகர்கள் நால்வர் இணைந்து கூட்டாக அறிக்கை - News View

About Us

About Us

Breaking

Thursday, April 8, 2021

இஸ்லாமிய அறிஞர்களை தீவிரவாதிகளென முத்திரை குத்துவது கவலை தருகின்றது - மூத்த பிரமுகர்கள் நால்வர் இணைந்து கூட்டாக அறிக்கை

ஏப்ரல் 21 தாக்குதலுடன் எந்தவித தொடர்புமற்ற இஸ்லாமிய அறிஞர்கள் ‘தீவிரவாதிகள்“ என முத்திரை குத்தப்பட்டுள்ளார்கள் என்று ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் முஸ்லிம் சமூகத்தின் மூத்த பிரமுகர்கள் நால்வர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

‘ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு சர்வதேச அளவில் புகழ்பெற்ற பல இஸ்லாமிய அறிஞர்களை 'தீவிரவாதத்தை பரப்புவோர்' மற்றும் 'தீவிரவாதிகள்' என்றெல்லாம் பெயரிட்டுள்ளது. 

ஆனால், தீவிரவாதம் என்றால் என்ன என்பது தொடர்பில் வரைவிலக்கணப்படுத்தவோ அல்லது அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள இஸ்லாமிய அறிஞர்களது பயங்கரவாத கருத்துகளையோ அல்லது அவர்கள் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட நிகழ்வொன்றையோ அல்லது அவர்களது மூல ஆக்கங்களிலோ அல்லது எழுத்துகளிலோ இருந்து மேற்கோள்களையோ காட்டத் தவறியுள்ளது என்பதுதான் மிகவும் கவலை தரும் விடயமாகும்’ என்றும் அந்நால்வரும் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர், மூத்த ஊடகவியலாளரும் நூலாசிரியருமான லத்தீப் பாரூக், சட்டத்தரணியும் எழுத்தாளருமான மாஸ் எல். யூஸுப், சன்மார்க்கப் போதகர் மன்சூர் தஹ்லான் ஆகியோர் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது இந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் இஸ்லாமிய அறிஞர்கள் (அவர்களில் பலர் தற்போது உயிருடன் கூட இல்லை) பற்றி குறிப்பிடப்படும் விடயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதததும் ஆதாரமற்றவைகளுமாகும் என்பதை நாம் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம். இந்த அறிஞர்களுக்கும் ஏப்ரல் 21 தாக்குதல்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

பல்வேறு காலகட்டங்களிலும் வாழ்ந்த, கருத்து ரீதியாக பிரான்சிய, பிரித்தானிய ஆக்கிரமிப்பினை எதிர்த்த இஸ்லாமிய சிந்தனையாளர்கள் தவறாக முத்திரை குத்தப்பட்டுள்ளனர். 

பல நூற்றாண்டுகள் தொடர்ந்த வெளிநாட்டு ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக கருத்து ரீதியாக எதிர்த்து நின்ற முன்னணி அறிஞர்கள் இஸ்லாமிய உலகிலும் தோன்றினார்கள். இவர்களே இஸ்லாமிய மறுமலர்ச்சியின் நாயகர்களாகக் கருதப்பட்டார்கள். 

ஆனால், இது ஆரம்பத்தில் 'அரசியல் இஸ்லாம்' என்று சொல்லப்பட்டு பின்னர் 'இஸ்லாமிய அடிப்படைவாதம்' என முத்திரை குத்தப்பட்டது. இம்மறுமலர்ச்சியின் கர்த்தாக்கள் அனைவரும் 'அடிப்படைவாதிகள்', 'தீவிரவாதிகள்', 'வஹாபிகள்' என முத்திரை குத்தப்பட்டனர். இந்த தவறான முத்திரை குத்தல்கள் அனைத்தும் இஸ்லாத்துக்கு எதிரான மேற்கத்தேய போரின் ஒரு பகுதியாக ஆரம்பமானது.

இந்த ஆணைக்குழுவின் அறிக்கையானது கணிசமான இஸ்லாமியப் பிரபலங்களைத் 'தீவிரவாதிகள்' எனப் போலியாகப் பட்டியலிட்டுள்ளது. 

ஹஸனுல் பன்னா, செய்யித்குத்ப், மௌலானா மௌதூதி, டொக்டர் சாகிர் நாயிக் போன்றவர்களது எழுத்துக்கள் பற்றிய எத்தனையோ ஆதாரங்கள் ஏற்கனவே நன்கு ஆவணப்படுத்தப்பட்ட வடிவங்களில் காணக் கிடைத்தாலும், இவர்கள் மீது ஆணைக்குழு தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை அவைகளில் இருந்து ஏன் ஆதாரம் காட்டவில்லை? யாரையும் முத்திரை குத்துவதற்கு முன்னர் 'தீவிரவாதம்' என்பதற்கான உறுதியான ஆதாரங்களை முன்வைக்க வேண்டியது அவசியம்.

தம் உயிருக்கு அச்சுறுத்தலாய் அமைந்த பல ஆக்கிரமிப்புகள் காணப்பட்ட போதிலும் இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தைக் கட்டிக்காப்பதற்கு பாடுபட்ட பல சூபி அறிஞர்களும் காணப்படவே செய்தார்கள். சூபிக்களைப் போலவே 'முவஹ்ஹிதீன்கள்' உம் முஸ்லிம்களே. ஆனால், மேலைத்தேய விமர்சகர்களால் இப்னு அப்துல் வஹாப் 'வஹாபி' என அழைக்கப்பட்டார்.

வெளிநாட்டு ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக அறிவுபூர்வமான எதிர்ப்பை கட்டமைத்தவர்களை அவதூறு செய்யும் நோக்கில் அவர்கள் இதனை செய்தார்கள். வஹாபின் சிந்தனைகளை தவறாகச் சித்தரித்து இஸ்லாத்தை ஒதுக்கி வைக்கும் ஒரு மேற்கத்திய சதித்திட்டமே வஹாபிசம் என்பதாகும். முஸ்லிம்கள் அல்குர்ஆனையும் முஹம்மது நபி அவர்களது வழிகாட்டல்களையுமே பின்பற்றுகிறார்கள்.

சூபிகளைத் தாக்குதல் அல்லது முவஹ்ஹிதீன்களை தாக்குதலானது இஸ்லாத்தைத் தாக்குவதற்கு சமனானதாகவே அமையும். ஏகத்துவத்தை எதிர்ப்பது இஸ்லாத்தை எதிர்ப்பது போன்றதே.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி
எம்.எம். ஸுஹைர்

லத்தீப் பாரூக் 
(மூத்த ஊடகவியலாளர், நூலாசிரியர்)

மாஸ் எல். யூஸுப்
(சட்டத்தரணி, எழுத்தாளர்)

மன்சூர் தஹ்லான்
(சன்மார்க்கப் போதகர்)

தினகரன்

No comments:

Post a Comment