மின்சார சபை ஊழியர் உயிரிழப்பு : பொலிஸ் கான்ஸ்டபில் உட்பட இருவர் கைது : சம்பவத்தை மறைக்க போலியாக முறைப்பாடு - News View

About Us

About Us

Breaking

Friday, April 2, 2021

மின்சார சபை ஊழியர் உயிரிழப்பு : பொலிஸ் கான்ஸ்டபில் உட்பட இருவர் கைது : சம்பவத்தை மறைக்க போலியாக முறைப்பாடு

(எம்.மனோசித்ரா)

அம்பலாங்கொட பிரதேசத்தில் மின்சார சபை ஊழியரொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபில் உள்ளிட்ட இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஹூங்குரகஸ்மங்சந்தி - வள்ளிகுருகெட்டி பிரதேசத்தில் மின்சார சபை ஊழியரொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சக ஊழியர்களால் மார்ச் மாதம் 30 ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் ஹூங்குரகஸ்மங்சந்தி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் அம்பலாங்கொடை - சீனிகொட கிளையில் பணிபுரியும் ஊழியர்கள் 6 பேர் வேலை நிமித்தம் ஹூங்குரகஸ்மங்சந்தி - வள்ளிகுருகெட்டி பிரதேசத்திற்கு சென்ற போது நபரொருவரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன்போது 27 வயதுடைய குமார பிரியதர்ஷன என்பவர் உயிரிழந்ததாகவும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

உயிரிழந்த நபருடனிருந்த சக ஊழியர்களால் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஹூங்குரகஸ்மங்சந்தி பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

குறித்த நபர்களால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிரதேசத்தில் பொலிஸார் கண்காணிப்புக்களில் ஈடுபட்ட போது, அப்பிரதேசத்தில் அவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. 

அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் மூலம் அம்பலாங்கொடை நகரத்தை அண்மித்த பகுதியொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த 6 பேரில் 37 வயதுடைய ஊழியர் ஒருவரது வீட்டிற்கு இவர்கள் அனைவரும் சென்றுள்ளனர். இதன்போது வீட்டினுள் இடம்பெற்ற சம்பவத்தில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். 

இதனை மறைப்பதற்காக ஹூங்குரகஸ்மங்சந்தியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக ஏனையோர் பொலிஸ் நிலையத்தில் போலியாக முறைப்பாடளித்துள்ளனர். 

இவர்கள் அனைவரும் சென்ற குறித்த வீட்டின் உரிமையாளரான 37 வயதுடைய மின்சார சபை ஊழியரே தன்னுடன் வந்த சக ஊழியர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமை மேலதிக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் அம்பலாங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு இவர் ரிவோர்வரொன்ரையே பயன்படுத்தியுள்ளமையும், மீட்டியாகொட பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே அதனை வழங்கியுள்ளமையும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. 

அதற்கமைய குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரால் வழங்கப்பட்ட ரிவோல்வரும் கைப்பற்றப்பட்டுள்ளது. அம்பலாங்கொடை பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இவ்வாறான மனித கொலை இடம்பெற்ற பின்னர் பொய்யாக முறைப்பாடளித்தமை, கொலையை மறைக்க முற்பட்டமை மற்றும் கொலை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment