மைத்திரியை நிரபராதியாக்கவா 60 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது - கேள்வி எழுப்பினார் இம்ரான் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 8, 2021

மைத்திரியை நிரபராதியாக்கவா 60 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது - கேள்வி எழுப்பினார் இம்ரான்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நிரபராதியாக்கவா பாராளுமன்றத்தில் அரச தரப்பின் 60 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் கேள்வி எழுப்பினார்.

புதன்கிழமை நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இந்த தாக்குதலின் பின் முஸ்லிம்கள் ஏனைய மதத்தவர்களால் இன்னொரு கண்கொண்டு பார்க்கின்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டன. முஸ்லிம்கள் அணியும் தொப்பி அபாயா அவர்களின் குர்ஆன் தீவிரவாதத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டது. 

அவர்களின் வீடுகளில் இருந்த சிறிய கத்திகள் பயங்கர ஆயுதமாக பார்க்கப்பட்டன. முஸ்லிம்களின் கடைகள், முஸ்லிம் கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

இந்த அரசாங்கம் உருவாக்க இந்த தாக்குதலே பிரதான காரணியாக இருந்தது. அப்பொழுது எதிர்க்கட்சியில் இருந்த இப்போது ஆளும் கட்சியில் உள்ளவர்கள் இந்த தாக்குதல் தொடர்பாக அப்பொழுது தெரிவித்த கருத்துக்கள் இந்த அறிக்கையில் இடம்பெறவில்லை. 

மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் இருபதாம் திருத்த சட்டத்தையும் நிறைவேற்ற அன்று குற்றம் சாட்டப்பட்ட பலர் இன்று சுற்றவாளியாக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் நடைபெற்றவுடன் இன்றைய அரசாங்கத்தில் உள்ளவர்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை கடுமையாக விமர்ச்சித்தனர். 

ஆனால் இன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை நிரபராதியாக்கவா பாராளுமன்றத்தில் அரச தரப்பின் 60 நிமிடங்கள் அவருக்கு ஒதுக்கப்பட்டது.

இந்த தாக்குதலால் இலாபம் அடைந்தவர்கள் யார்? சிலரை காப்பாற்றும் நோக்கில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment