அசாமில் அடுத்தடுத்து 3 முறை நில நடுக்கம் : வீடுகள், கட்டிடங்கள் இடிந்தன - பீதியில் வெளியே ஓடிய மக்கள் - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 28, 2021

அசாமில் அடுத்தடுத்து 3 முறை நில நடுக்கம் : வீடுகள், கட்டிடங்கள் இடிந்தன - பீதியில் வெளியே ஓடிய மக்கள்

அசாமில் 3 முறை ஏற்பட்ட நில நடுக்கத்தால் மக்கள் பெரும் பீதி அடைந்தனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி தஞ்சம் அடைந்தனர்.

சட்டசபைத் தேர்தல் முடிந்த மாநிலங்களில் ஒன்று அசாம். அங்கு மார்ச் 27ம் திகதி முதல் ஏப்ரல் 6ம் திகதி வரை 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக வாக்குப்பதிவு முடிந்தது. ஓட்டு எண்ணும் பணி தொடர்பான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது அம்மாநிலத்தையே உலுக்கியது.

சோனித்பூர் அருகே மையமாக கொண்டு இன்று காலை 7.51 மணியளவில் 17 கிலோமீட்டர் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி இருந்தது.

இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் மீண்டும் 2 முறை நிலநடுக்கம் உருவானது. 7.58 மணி அளவில் 4.3 ரிக்டர் அளவுகோலிலும், 8.01 மணியளவில் 4.4 ரிக்டர் அளவுகோலிலும் இது பதிவாகி இருந்தது.

அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சோனித்பூர் மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளது.

சோனித்பூர் மாவட்ட தலைநகர் தேஜ்பூரில் சில வீடுகள் இடிந்து விழுந்தன. பல கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது. கவுகாத்தி உள்ளிட்ட மற்ற இடங்களிலும் வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்தன.

3 முறை ஏற்பட்ட நில நடுக்கத்தால் மக்கள் பெரும் பீதி அடைந்தனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி தஞ்சம் அடைந்தனர்.

அந்த மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்பு பற்றிய முழு விவரம் இன்னும் தெரியவில்லை. இதுவரை உயிர் சேதம் பற்றி எந்த தகவலும் இல்லை.

ஏற்கனவே கொரோனா பரவலை குறைக்க இரவு நேர ஊரடங்கு அங்கு அமுல்படுத்தப்பட்டது. தற்போது நில நடுக்கம் அம்மாநில மக்களுக்கு கூடுதலான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அசாம் மாநில முதலமைச்சர் சர்பானந்த சோனாவால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தை தொடர்புகொண்டு நில நடுக்கம் குறித்த பாதிப்பை கேட்டறிந்தார். 

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியதாவது அசாமில் பெரிய அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. அனைவரது நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்கிறேன். அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நிலைமைகளை கண்காணித்து வருகிறேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த நிலநடுக்கம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அசாம் முதலமைச்சரை தொடர்புகொண்டு பேசினார். நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அசாம் மாநிலத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் கடந்த 5ம் திகதி 5.4 ரிக்டர் அளவுகோலில் நில நடுக்கம் ஏற்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அசாம் மாநிலத்தில் இன்று ஏற்பட்ட நில நடுக்கம் பக்கத்து மாநிலங்களான மேகாலயா மற்றும் மேற்கு வங்காளத்தின் வடக்கு பகுதிகளிலும் உணரப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad