சிறைச்சாலைகளில் 260 கைதிகளுக்கு கொரோனா : இரு வாரங்களுக்கு பார்வையிடத் தடை..! - News View

Breaking

Post Top Ad

Tuesday, April 27, 2021

சிறைச்சாலைகளில் 260 கைதிகளுக்கு கொரோனா : இரு வாரங்களுக்கு பார்வையிடத் தடை..!

(செ.தேன்மொழி)

சிறைச்சாலைகளில் கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்கள் 260 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்போது புதிதாக சிறை வைக்கப்படும் கைதிகளிலேயே அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர், ஆணையாளர் (நிர்வாகம் மற்றும் புனர்வாழ்வு) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கொவிட்-19 வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமாக பரவலடைந்து வருகின்ற நிலையில் சிறைச்சாலைகளில் 260 வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் கைதிகளின் உறவினர்கள் அவர்களை பார்வையிட வரும் போது கைதிகள் ஒன்றுக்கூடுவதால் வைரஸ் பரவல் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது என்பதனால், இரு வாரங்களுக்கு கைதிகளை பார்வையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்போது புதிதாக சிறை வைக்கப்படும் கைதிகள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டு பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்குட்படுத்தப்படுகின்றனர். அதற்கமைய தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுபவர்கள் சிகிச்சைக்காக கந்தக்காடு சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதுடன், ஏனையவர்கள் தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்ததுடன், உரிய சிறைச்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

இந்நிலையில் புதிதாக சிறை வைக்கப்படும் கைதிகளிலே அதிகளவான வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். ஏற்கனவே சிறை வைக்கப்பட்டுள்ள கைதிகளில் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்த மட்டத்திலேயே இருக்கின்றது. 

இதேவேளை, கட்டாயம் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டிய கைதிகள் மாத்திரமே நீதிமன்ற விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்படுகின்றனர். ஏனையவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெற்று வருகின்றன.

No comments:

Post a Comment

Post Bottom Ad