எதிர்வரும் ஏப்ரல் முதல் Unlimited Data Package - இலக்கத்தை மாற்றாது வலயமைப்பை மாற்றும் வசதி ஒக்டோபரில் அறிமுகம் - News View

About Us

About Us

Breaking

Friday, March 19, 2021

எதிர்வரும் ஏப்ரல் முதல் Unlimited Data Package - இலக்கத்தை மாற்றாது வலயமைப்பை மாற்றும் வசதி ஒக்டோபரில் அறிமுகம்

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல், எல்லையற்ற தரவு பொதிகளை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக, தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) தெரிவித்துள்ளது.

தனது உத்தியோகபூர்வ ட்விற்றர் கணக்கிலேயே (@TRCSL) அந்நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.

எல்லையற்ற தரவு பொதிகள் தொடர்பில் அனைத்து தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களும் மார்ச் 01ஆம் திகதிக்கு முன்னர் தங்களது சமர்பிப்புகளை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு அமைய, தற்போது அந்நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள பொதிகளை ஆராய்ந்து வருவதாக, TRC அறிவித்துள்ளது.

அதற்கமைய, முதலாவது சுற்று Unlimited Data பொதிகளை எதிர்வரும் ஏப்ரலில் எதிர்பார்க்கலாம் என TRC மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தொலைபேசி இலக்கத்தை மாற்றாமல் தாம் விரும்பிய வலையமைப்பிற்கு மாறும் வசதியான, தொலைபேசி இலக்க இலகுவாக்கம் (number portability), எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதமளவில் இலங்கையில் அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக, இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் (TRCSL) பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனாநாயக்க தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (17) இடம்பெற்ற, Hutch நிறுவனம் இலங்கையின் அதிவேக 5G அனுபவத்தை வெளியிடும் நிகழ்வில் கலந்து கொண்ட அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த வருடம் ஏப்ரலில் இது தொடர்பான முதற்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக TRCSL தெரிவித்திருந்தது. எனவே தற்போது அது எந்த நிலையில் உள்ளது என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அனைத்து வலையமைப்பினதும் கொள்கை ரீதியான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், வழமையான முறைமைக்கு அமைய, பொதுமக்களிடையே இது தொடர்பில் ஆலோசனையை பெறும் நடவடிக்கையும் இடம்பெற்று முடிந்துள்ளதாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, தற்போது குறித்த நடவடிக்கை தொழில்நுட்ப ஆலோசனை கட்டத்தில் உள்ளதாகவும், இதற்காக பாகிஸ்தான் தொலைத் தொடர்பு அதிகாரிகளின் ஆலோசனைகளை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இச்செயன்முறையை பாகிஸ்தான் மிக சிறப்பாக அந்நாட்டில் மேற்கொண்டு, அதில் வெற்றி கண்டுள்ளமையே அந்நாட்டிடம் இது தொடர்பான ஆலோசனை பெறுவதற்கான காரணம் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment