சஜித் பிரேமதாசவின் கருத்துக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எவ்வித தொடர்புமில்லை - பாலித்த ரங்கே பண்டார - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 10, 2021

சஜித் பிரேமதாசவின் கருத்துக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எவ்வித தொடர்புமில்லை - பாலித்த ரங்கே பண்டார

(செ.தேன்மொழி)

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பான பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தால், அது அவரது தனிப்பட்ட கருத்தாகும். அந்த கருத்துக்கும் எமக்கும் எவ்வித தொடர்புமில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன் போது அவர் மேலும் கூறியதாவது, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னர், நாட்டின் தலைவர் வெளிநாடு சென்றிருந்த சந்தர்ப்பத்திலும் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அப்போதைய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன ஆகியோர் விரைந்து செயற்பட்டிருந்ததுடன், அதற்கமைய தாக்குதலின் பின்னர் இடம்பெறவிருந்த பாரிய பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுத்தனர்.

சம்பவதினத்தன்று இரவு 9 மணியாகும் போது குண்டுதாரிகள் தொடர்பிலும் அவர்களின் அணி தொடர்பிலும் பொலிஸார் விபரங்களை பெற்றுக் கொண்டு, மீண்டும் ஒரு தாக்குதல் இடம்பெறாத வகையில் அவற்றை தடுக்க நடவடிக்கை எடுத்திருந்தனர். அதனால் ஐக்கிய தேசியக் கட்சி பொறுப்புடன் செயற்படவில்லை என்று கூற முடியாது.

அப்போது நாட்டின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவே பதவி வகித்தார். அவரே பாதுகாப்பு அமைச்சராகவும் செயற்பட்டார். அதனால் இந்த தாக்குதல் சம்பவத்தை தடுப்பதற்கான பொறுப்பு அவரையே சார்ந்துள்ளது. 

எனினும் தாக்குதல் இடம்பெற்று 2 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னமும், தற்கொலை தாரிகளுக்கான உதவி ஒத்தாசைகளை வழங்கியவர்கள் தொடர்பிலும், பயங்கரவாதி சஹ்ரானுக்கு அரச அனுசரணையுடன் ஊதியம் வழங்கியவர்கள் தொடர்பிலும் மற்றும் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதாக கூறப்படும் நபர்கள் தொடர்பிலும் எந்த தகவல்களும் சேகரிக்கப்படவில்லை.

ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை நடத்திய போதிலும், அதிலும் முக்கிய தகவல்கள் எதுவும் இல்லை. இந்நிலையில் இது தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவிடம் கையளித்திருந்தால், தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரது விபரங்களையும் அறிந்து கொண்டிருக்க முடியும்.

பாராளுமன்ற உறுப்பினர் அசோக்க அபேசிங்க, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தொடர்புள்ளதாக தெரிவித்திருந்தால், அதற்கான சாட்சிகள் அவரிடம் இருந்திருக்கலாம். அதன் காரணமாகவே அவர் அவ்வாறு தெரிவித்திருக்கலாம். ஆனால் அவர் அதனை உரிய தரப்பினரிடமே தெரிவித்திருக்க வேண்டும். தன்னிடமுள்ள ஆதாரங்களை காண்பித்து உரிய தரப்பினரிடம் அதனை அவர் கையளித்திருந்தால், அதில் சிக்கல் ஏற்பட்டிருக்காது.

இதேவேளை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தாக்குதலின் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்திருந்தால் அது அவரதும், ஐக்கிய மக்கள் சக்தியினதும் கருத்தாகும். அந்த கருத்து ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியுடையதாக அமையாது.

No comments:

Post a Comment

Post Bottom Ad