எரிவாயு விலையை அதிகரிப்பதற்கான எவ்வித அவசியமும் இல்லை - நாட்டில் அரிசி தட்டுப்பாடும் இல்லை - சதொச ஊடாக விற்பனை செய்யப்படவுள்ள தேங்காய்கள் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 18, 2021

எரிவாயு விலையை அதிகரிப்பதற்கான எவ்வித அவசியமும் இல்லை - நாட்டில் அரிசி தட்டுப்பாடும் இல்லை - சதொச ஊடாக விற்பனை செய்யப்படவுள்ள தேங்காய்கள்

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என்றும் பண்டிகை காலங்களில் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கான எவ்வித அவசியமும் இல்லை எனவும் நிதி அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் சந்தை வாய்ப்பு தொடர்பில் நேற்று (2021.03.17) பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற மறுஆய்வு கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அரிசி, தேங்காய், பால்மா, மீன், இறைச்சி, முட்டை, பருப்பு மற்றும் தானிய வகை, பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம், கிழங்கு, மரக்கறி மற்றும் பழங்கள் போன்றே எரிவாயு நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்குவது தொடர்பில் பிரதமரின் கவனம் செலுத்தப்பட்டது.

கொவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் விநியோகச் வலையமைப்பு சீர்குலைதல், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் விலையை அதிகரிக்க எரிவாயு நிறுவனங்கள் கோரியுள்ளமை என்பன தொடர்பிலும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இக்கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தினார்.

இதன்போது மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி பிரிவின் அறிக்கையை முன்வைத்து, கொவிட்-19 தொற்று நோய்க்கு மத்தியில் உலகப் பொருளாதாரத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருவதாக சுட்டிக்காட்டினார். 

அத்துடன், இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் வர்த்தக பற்றாக்குறை அதிகரிக்கக்கூடும் என்றும் மத்திய வங்கி பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

அதற்கமைய உள்ளூர் விவசாயத்தின் வளர்ச்சி மற்றும் உள்ளூர் வணிகங்களை வலுப்படுத்துதல் பொருட்களின் ஏற்றுமதியில் கவனம் செலுத்துவதன் மூலம் அந்நிய செலாவணியை சம்பாதிக்க வேண்டியது அவசியம் என மத்திய வங்கி பிரதிநிதிகள் விளக்கினர்.

இலங்கை சுங்க திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்ட சுமார் 3,000 மெட்ரிக் டொன் அரிசியை சதொச ஊடாக பொதுமக்களுக்கு விநியோகிக்க ஒரு திட்டத்தை வகுக்க முடியுமா என பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ வினவினார்.

நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல அதற்கு ஒப்புதலளித்ததுடன், இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கௌரவ பிரதமர் சுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஜி.வி.ரவிப்ரியவுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான அரிசி பங்குகளை சந்தைக்கு விடுவித்தல் மற்றும் மேலும் 25,000 மெட்ரிக் டொன் அரிசியை உள்ளூர் வியாபாரிகளிடமிருந்து கொள்வனவு செய்வதற்கும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

நாட்டில் அரிசி தட்டுப்பாடு இல்லை என தெரிவித்த பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ, உள்ளூர் நுகர்வுக்கு போதுமான அரிசி நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், புத்தாண்டு காலத்தில் காய்கறி விலை குறையும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த தெங்கு, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை ஊக்குவிப்பு மற்றும் அது சார்ந்த கைத்தொழில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வகைப்படுத்தும் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ, எதிர்காலத்தில் சதொச ஊடாக தேங்காய்களை மலிவான விலையில் விற்பனை செய்வதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படும் என கூறினார்.

எரிவாயு விலையை அதிகரிப்பதற்கான அழுத்தம் குறித்து கருத்து தெரிவித்த பசில் ராஜபக், கொவிட்-19 தொற்றுநோயுடன் உலக எரிவாயு விலை வீழ்ச்சியடைந்த காலப்பகுதியில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் இலாபம் ஈட்டப்பட்டதாகவும், அக்காலத்தில் தனியார் துறை ஊழியர்களின் வேலைகளை பாதுகாக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு தற்போது உதவி வழங்குவது கடமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த கலந்துரையாடலில் பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர்களான நிமல் சிறிபால த சில்வா, பந்துல குணவர்தன, விமல் வீரவன்ச, பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர்களான அஜித் நிவாட் கப்ரால், ஷஷீந்திர ராஜபக்ஷ, தயாசிறி ஜயசேகர, லசந்த அழகியவன்ன, அருந்திக பெர்னாண்டோ, ஜானக வக்கும்புர, ஷெஹான் சேமசிங்க, பிரசன்ன ரணவீர, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் டப்ளிவ்.டீ.லக்ஷ்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment