ஜனாதிபதி பாலர் பாடசாலைக்கு முதலில் செல்ல வேண்டும் - சாணக்கியன்! - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 9, 2021

ஜனாதிபதி பாலர் பாடசாலைக்கு முதலில் செல்ல வேண்டும் - சாணக்கியன்!

மனித உரிமைகள் பற்றி கற்பதற்கு ஜனாதிபதி பாலர் பாடசாலைக்கு முதலில் செல்ல வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (09) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இன்று இந்த சபையில் தேசிய இரத்தினக்கல் ஆபரண சபை சம்மந்தமாகவும் மற்றும் வெளிநாட்டு செலாவணி சட்டத்தின் ஒழுங்கு விதிகள் பற்றியும் கலந்துரையாடுகின்றோம்.

இந்த வெளிநாட்டு நாணயத்துடன் தொடர்புபட்ட சகல விதமான விடயங்களும் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடப்பட்டன. நாட்டின் பொருளாதாரம் பல்வேறு விடயங்களில் தங்கியிருப்பதை நாம் உணரக்கூடியதாக உள்ளது.

இவ் விடயம் பற்றி கலந்துரையாடுவதற்கு முன்னர் இந்த விடயம் பற்றி மக்கள் மத்தியில் சில சந்தேகங்கள் காணப்படுகின்றன. அதைப் பற்றி நான் இங்கு கேட்க விரும்புகின்றேன். மாணிக்கக் கோபுரம் ஒன்று அமைப்பதாக கூறப்படுகின்றது.

அது தாமரைக் கோபுரமாக மாறி விடுமோ என்ற சந்தேகம் காணப்படுகின்றது. இதற்கென மாணிக்கக்கல் கூட்டுத்தாபனத்தினால் 348 மில்லியன் ரூபாய் செலவிடப்படுகின்றது. இதனை விமான நிலையத்திற்கு அருகில் அமைப்பது நன்றாக இருக்கும் எனக் கூறப்படுகின்றது.

யாழ்ப்பணத்தில் பனை மரங்கள் காணப்படுகின்றன. பனை மரங்களில் உற்பத்திப் பொருட்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் ஆர்வம் காட்ட வேண்டும் என நான் இந்த நேரத்திலே கூறுகின்றேன்.

வெளிநாட்டுச் செலாவணி சட்டத்தினைப் பற்றிப் பேசும் பொழுதும் இந்த சட்டத்திற்கு எதிராக ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டம் நடைபெற்று வருகின்றது.

இதனை இலங்கைக்கு எதிரான ஒரு மனித உரிமை ஆணைக்குழுவாக இலங்கை மக்களுக்கு சித்தரிக்கப் பார்க்கின்றார்கள். நாங்கள் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை நிறுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். மனித உரிமை என்பது தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆகிய அனைவருக்கும் உரித்தான ஒன்று.

இலங்கையில் தற்போதுள்ள பிரதம அமைச்சரே முதன் முதலாக மனித உரிமைக் குழு பற்றி எமக்கு கூறியவர். 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுற்ற போது ஏற்பட்ட மனித உரிமைகள் பற்றிய பிரச்சினைகள் இருக்கின்றன.

அதற்கு மேலதிகமாக வெலிகடை சம்பவம், அண்மையில் ஏற்பட்ட மகர சிறைச்சாலை சம்பவம், ஜனாசா புதைத்தல் பற்றிய பிரச்சினை என்பன காணப்படுகின்றது.

இலங்கையில் உள்ள இளைஞர் யுவதிகள் கனடா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா செல்ல விரும்புகின்றோம் என்று கூறுகின்றார்கள். பணம் படைத்த அமைச்சர்களது பிள்ளைகள் வெளிநாடு சென்று வாழ முடியும்.

இலங்கையில் வசிக்கின்ற குறைந்த வருமானம் பெறுபவர்கள் எதற்காக வெளிநாடு செல்ல விரும்புகின்றார்கள்? கனடா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளுக்கு அவர்கள் செல்ல காரணம் அங்கு மனித உரிமைகள் இருக்கின்றன. மனித உரிமைகளை மதிக்கின்ற நாடுகளாக அவை இருக்கின்றன.

மனித உரிமை என்ற விடயம் இல்லாமல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியுமென்று நான் நினைக்கவில்லை. இலங்கைப் பொருளாதாரத்தில் மனித உரிமைகள் பின்னிப்பிணைந்ததொன்றாகக் காணப்படுகின்றன.

இலங்கைக்கு உதவி வழங்கிய மேற்கத்தேய நாடுகள் 1980 களுக்குப் பிறகு உதவிகள் வழங்கவில்லை. எதிர்காலத்தில் மனித உரிமைகளை மதிக்கவில்லை என்றால் GSP+ போன்ற விடயங்களைக் கூட எங்களுக்கு இழக்க நேரிடும். மனித உரிமைகள் என்ற விடயத்தையும் இங்கு அரசியல் மயமாக்கி இருக்கின்றார்கள்.

இலங்கையில் வசிக்கின்ற எல்லோரும் மகிழ்ச்சியடைய வேண்டும். மனித உரிமையை மதிக்கின்ற நாடு என்னும் விம்பம் இருக்க வேண்டும். Finance கட்டுரையில் காணப்படுகின்றது.

23 பெப்ரவரி பத்திரிகையிலே மே மாதத்தில் 200 ரூபாய்க்கும் மேலாக டொலரின் பெறுமதி அதிகரிக்கும் எனக் கூறுகின்றார்கள். இறக்குமதி குறைக்கப்பட்டிருக்கின்றது என அமைச்சர் கூறியதை விட மாறுபட்ட நிலை தான் நிஜத்தில் உள்ளது.

680 மில்லியன் வருமானத்தில் இருந்து குறைந்திருக்கின்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ICR Credit Rating Agency 2.3 பில்லியன் தேவைப்படுமெனக் கூறுகின்றது. சீனாவுடன் இரு தரப்பு உடன்படிக்கை செய்து 2 பில்லியனைப் பெறுவதற்கு இலங்கையிலிருந்து ஏதாவதொரு இடத்தைக் கொடுக்க வேண்டும்.

நாங்கள் துறைமுகத்தைக் கொடுக்க இருக்கின்றோம். இந்தத் திசையில் நாம் செல்லக் கூடாது. வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் கூற்றிலே 21 நாடுகள் இலங்கைக்கு ஆதரித்துப் பேசுவதாக கூறப்பட்டிருக்கின்றது. அதில் ஒரு நாடு கூட மேற்கத்தேய நாடு இல்லை.

எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் போது மேற்கத்தேய நாடுகளின் ஒத்துழைப்பு இல்லாவிடின் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது. ஜனநாயகம் இல்லாத நாட்டிலே பிள்ளை பெற்றெடுப்பதற்குக் கூட உரிமை இல்லை. YouTube, Instagram, Google இல்லை.

எமது நாட்டு மக்களுக்கு இவ்வாறு வாழ முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஜனாதிபதி அண்மையிலே PhD பெற்றதாகவும், இரண்டாவது PhD யும் பெறப்போவதாகவும் கூறியிருந்தார்.

உண்மையில் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமென்றால் மனித உரிமைகள் பற்றி கற்பதற்கு ஜனாதிபதி பாலர் பாடசாலைக்குச் முதலில் செல்ல வேண்டும்.

PhD க்கு முன்னர் மனித உரிமை பற்றிய ஆரம்பப் பாடசாலைக்கு அவர் செல்ல வேண்டும். அன்று பிரதமர் அவர்கள் ஜனாசா அடக்கத்திற்கு அனுமதி கொடுப்பதாக கூறிவிட்டு பின்னர் இல்லையென மறுக்கின்றார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் மாகாண சபைத் தேர்தல் நடத்துவதாகவும், காணமலாகப்பட்டார்கள் இல்லையெனக் கூறிவிட்டு காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்திக்கச் செல்கின்றார்கள். மனித உரிமைகளை மதிக்க பழகிக் கொள்ள வேண்டும்.

மனித உரிமைக்காக இலங்கையின் எல்லா இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னேடுக்கப்படுகின்றன. மனித உரிமைகள் ஆணைக்குழுவினை அரசியல் நோக்கத்தில் பார்க்க வேண்டாம்.

மனித உரிமைகளை மதிக்கின்ற ஒரு நாடாக நாம் மாற வேண்டும். இலங்கையினை அவுஸ்ரேலியா போன்ற நாடாக நாம் மாற்ற வேண்டும். எதிர்காலத்தில் இந்த நாடு இராணுமயமாக்கலினை நோக்கிச் சென்றால் மியன்மார் போல சென்றுவிடக் கூடாது என்றே நான் கூறுகின்றேன். நாம் மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment