பளை, கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் காணிப் பிரச்சினைகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தீர்வு - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 10, 2021

பளை, கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் காணிப் பிரச்சினைகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தீர்வு

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச செயலக மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் தீர்க்கமான பல முடிவுகளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டார்.

பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச செயலகத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை கடந்த வாரம் நடத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதனைத் தொடர்ந்து 5ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தையும் நடத்தியிருந்தார்.

பளை பிரதேச செயலகத்தில் மக்களால் முன்வைக்கப்பட்ட காணி தொடர்பான பல்வேறு சர்ச்சைகளைச் செவிமடுத்த அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, உடனடியாகவே அவற்றுக்கான தீர்வுகளை அந்த இடத்திலேயே பெற்றுக் கொடுத்தார்.

பச்சிலைப்பள்ளி கோவில்வயல் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயத்தைக் காரணம் காட்டி கையகப்படுத்தப்பட்ட காணிகள் தொடர்பான முறைப்பாடு பொதுமக்களால் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்ட போது, உடனடியாகவே வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களுடன் பேசிய அமைச்சர் டக்ளஸ், காணிகளைக் கையகப்படுத்தும் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு பணிப்புரை விடுத்தார்.

காணி அமைச்சருடனும், வன வள பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் தொடர்பான அமைச்சர்களுடனும் இது தொடர்பில் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவித்த அமைச்சர் டக்ளஸ், விரைவில் துறைசார் அமைச்சர்கள் கிளிநொச்சி மாவட்டத்துக்கு வந்து இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார்கள் எனவும், அதுவரையில் காணிகளைக் கையகப்படுத்தும் செயற்பாடுகளை நிறுத்தி வைக்குமாறும் பணித்தார்.

இது தொடர்பாக பொதுமக்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறும், துறைசார் அமைச்சர்களின் வருகையின் பின்னர் இந்தப் பிரச்சினைகளுக்கு இறுதி முடிவை எடுக்கலாம் என்றும் இதன் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இதேபோல், காணி சீர்திருத்த ஆணைக்குழுவினரால் கரந்தாய் பகுதியில் கடற்றொழிலாளர் சங்கத்துக்கு வழங்கப்பட்ட காணி வேறொருவருக்கு புதிதாக வழங்கப்பட்டிருப்பது தொடர்பான முறைப்பாட்டை ஆராய்ந்த அமைச்சர் டக்ளஸ், உடனடியாக அந்தக் காணியை மீண்டும் கடற்றொழிலாளர் சங்கத்துக்கு வழங்குமாறு பணித்தார். 

இது தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத் தீர்மானம் உடனடியாகவே எழுத்து மூலம் உரிய தரப்புக்களுக்கு வழங்கப்படவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதேபோல், தென்னை அபிவிருத்திச் சபையுடன் காணப்படும் காணிச் சர்ச்சைகளுக்கும் உரிய அமைச்சருடன் பேசி விரைவில் தீர்வைப் பெற்றுத் தருவதாகவும் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ், இந்திராபுரம் பகுதி மக்களின் வீதிப் பிரச்சினை மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவினருடனான காணிச் சர்ச்சைக்கும் விரைவில் தீர்வைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.

இதேபோல், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை, ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் சகிதம் இணைந்து தலைமையேற்று நடத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தை அனுராதபுரத்துக்கு மாற்றும் செயற்பாட்டை காணி அமைச்சர் சந்திரசேனவுடன் தொலைபேசியில் உரையாடி தடுத்து நிறுத்தினார்.

அதேபோல், இரணைதீவு பகுதியில் முஸ்லிம்களின் ஜனஸாக்களை நல்லடக்கம் செய்யும் முடிவையும் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் உரையாடி மாற்றியமைக்க முடியும் என்று உறுதியாக நம்பிக்கை வெளியிட்டார்.

கே. றுஷாங்கன்
(கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின்
இணைத் தலைவரான அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர்)

No comments:

Post a Comment