இது நாம் இருக்க வேண்டிய இடமில்லை, நாம் எங்கோ இருக்க வேண்டியவர்கள் - ஊடகவியலாளர்களுக்கான சலுகை அட்டை அறிமுக நிகழ்வில் அமைச்சர் கெஹலிய - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 31, 2021

இது நாம் இருக்க வேண்டிய இடமில்லை, நாம் எங்கோ இருக்க வேண்டியவர்கள் - ஊடகவியலாளர்களுக்கான சலுகை அட்டை அறிமுக நிகழ்வில் அமைச்சர் கெஹலிய

தவறுகளை நிவர்த்தி செய்துகொண்டு நாட்டை முன்னேற்றுவதற்கான காலம் இன்னும் கடந்துவிடவில்லையென்று ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

"இது நாம் இருக்க வேண்டிய இடமில்லை. நாம் எங்கோ இருக்க வேண்டியவர்கள். தவறுகளை நிவர்த்தி செய்து கொண்டு முன் செல்வதற்கு எம்மால் முடியுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டின் 22 மில்லியன் மக்களை மனதில் வைத்து செயற்படுவது முக்கியமானதென தெரிவித்த அமைச்சர், அமைச்சுக்கள் தமக்குள்ள வளங்களை பகிர்ந்து செயற்பட்டால் நாட்டை அபிவிருத்தியிலும் பொருளாதாரத்திலும் கட்டியெழுப்ப எம்மால் முடியும் என்றும் தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களுக்காக 'மீடியா பிரிவிலேஜ்' என்ற சலுகை அடிப்படை அட்டைகள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.

கொழும்பு வர்த்தக சங்கத்தின் அனுசரணையுடன் மேற்படி அட்டைகள் வழங்கப்படுவதுடன் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் கொரோனா வைரஸ் பாதிப்பினால் பின்னடைவு கண்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு புதிய தொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு அவர்களை ஊக்குவிப்பது முக்கியமாகும். 

1970 ஆம் ஆண்டு இலங்கை ஆசியாவின் சுவிற்சர்லாந்து என்று புகழப்பட்டது. எமது நாடு அத்தகைய பெருமையுடன் விளங்கியது. 1972 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க மே தின நிகழ்வில் உரையாற்றிய போது நாட்டிற்கு மஞ்சள் இறக்குமதி செய்வதை நிறுத்துவேன் என்று தெரிவித்தார். இன்றும் நாம் அதே நிலையில்தான் உள்ளோம். 

நாம் தவறவிட்ட இடங்களை சரி செய்வது மிகவும் முக்கியமாகும் அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். வர்த்தக உலகத்துடன் இணைந்த செயற்பாடுகள் எமக்கு அவசியமானது. தேசிய வேலைத் திட்டங்களை பலப்படுத்துவதும் முக்கியமாகும். 

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் முன்னேற்றம் கண்டு கொரோனா வைரஸ் சூழ்நிலையில் பின்னடைவு கண்ட தொழில் முயற்சியாளர்களுக்கு கை கொடுக்கும் திட்டம் அவசியமாகும். நாட்டின் நிலையான நிதி பலத்துக்கு வழிவகுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment

Post Bottom Ad