போதைப் பொருள் கடத்தலுக்கு உதவிய இராணுவ சிப்பாய் கைது - News View

Breaking

Post Top Ad

Thursday, March 18, 2021

போதைப் பொருள் கடத்தலுக்கு உதவிய இராணுவ சிப்பாய் கைது

(எம்.மனோசித்ரா)

பாணந்துரையில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய்க்கு உதவி வழங்கியமை தொடர்பில் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற பிரிதொரு இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஹொரனை பிரதேசத்தில் பாணந்துரை மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினால் 45 கிலோ கிராம் ஹெரோயினுடன் இராணுவ சிப்பாயொருவரும், இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற முன்னாள் சிப்பாயொருவரும் கைது செய்யப்பட்டனர். இதன்போது வேனொன்றும் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளுக்கமைய நேற்று புதன்கிழமை இதற்கு உதவியமை தொடர்பில் பொல்பித்திகம பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரும் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர் என்பது தெரியவந்துள்ளது. இவர் ஹொரனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பெற்றுக் கொண்ட உத்தவுக்கமைய தடுப்புக்காவலில் வைத்து மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad