ஜனாதிபதி தனது சொத்து மதிப்பை நாட்டுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் - காடழிப்பு குற்றச்சாட்டுடைய பலர் அரசு உயர் பதவிகளில் : எரான் விக்ரமரத்ன - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 9, 2021

ஜனாதிபதி தனது சொத்து மதிப்பை நாட்டுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் - காடழிப்பு குற்றச்சாட்டுடைய பலர் அரசு உயர் பதவிகளில் : எரான் விக்ரமரத்ன

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி மாறுப்பட்ட அரசியல் கலாச்சாரத்தை பின்பற்றுபவராக இருப்பின் தனது சொத்து மதிப்பை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும். இச்செயற்பாடு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், காடழிப்பு, இயற்கை வளங்கள் அழிப்பு ஆகிய சம்பவங்களின் பின்னணியில் அரசியல்வாதிகள் உள்ளார்கள் என்பதை அதிகாரிகள் அறியாவிடினும் நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். அதிக வருவாயை கூட்டிக் கொள்ளும் ஒரு துறையாக இன்று காடழிப்பு, இயற்கை வளங்கள் அழிப்பு துறை காணப்படுகிறது. அரசாங்கமும் அதற்கு முழுமையாக ஆதரவு வழங்குகிறது.

காடழிப்பு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் பலர் அரசாங்கத்தில் உயர் பதவி வகிக்கிறார்கள். கொழும்பு மாவட்டத்தில் ஒட்சிசன் அளவு குறைவடைந்து செல்வதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு பிரதேசத்தில் காடழித்து அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுவதால் அப்பிரதேச மக்கள் மாத்திரம் தற்காலிக பயனை பெற்றுக் கொள்வார்கள். அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறுபட்ட வழிமுறைகளில் இயற்கை வளங்கள் பல காரணிகளை கொண்டு அழிக்கப்பட்டுள்ளன.

அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் உள்ளடக்கங்கள் நீதிமன்றத்தை அவமதித்துள்ளது. நீதிமன்றில் விசாரணையில் உள்ள ஒரு வழக்கு குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு கிடையாது. 

நீதிமன்ற விசாரணையில் உள்ள ஒரு வழக்கு பற்றி அரசியல் மட்டத்தில் கருத்துரைப்பது கூட நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் நிலையில் வழக்கு விசாரணைகளை எவ்வாறு ஆணைக்குழுவினால் முடிவுக்கு கொண்டு வர முடியும்.

ஆளும் தரப்பின் உள்ளவர்களுக்கு எதிராக நீதிமன்றில் விசாரணையில் இருந்த வழக்குகள் பல ஆணைக்குழுவினால் இரத்து செய்யப்பட்டுள்ளன. இவ்விடயம் குறித்து பாராளுமன்றில் பல விடயங்களை பகிரங்கப்படுத்துவோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad