சீனி இறக்குமதி மூலம் மோசடி செய்யப்பட்ட பணத்தை மீளப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் - மக்கள் பணத்தை கொள்ளையிடும் அரசாங்கமாகவே தம்மை காண்பிக்கின்றனர் : திஸ்ஸ அத்தநாயக்க - News View

About Us

About Us

Breaking

Friday, March 12, 2021

சீனி இறக்குமதி மூலம் மோசடி செய்யப்பட்ட பணத்தை மீளப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் - மக்கள் பணத்தை கொள்ளையிடும் அரசாங்கமாகவே தம்மை காண்பிக்கின்றனர் : திஸ்ஸ அத்தநாயக்க

(செ.தேன்மொழி)

சீனி இறக்குமதி வரிச் சலுகை மூலம் இடம்பெற்ற மோசடி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து, மோசடி செய்யப்பட்ட பணத்தை மீளப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தனாயக்க வலியுறுத்தினார்.

கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது, சீனி இறக்குமதி செய்வதற்கான வரி குறைக்கப்பட்டதால் அரசாங்கத்திற்கு 15.9 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக நிதி தொடர்பான பாராளுமன்ற மேற்பார்வை குழுவுக்கு நிதி அமைச்சு சமர்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனி விலையை குறைப்பதற்காகவே இறக்குமதி வரியை குறைத்ததாக அரசாங்கம் தெரிவித்து வந்தாலும் அது நிறைவேறவில்லை. இந்த வரிக்குறைப்பு ஊடாக ஒரு கிலோ சீனியை 85 ரூபாவுக்கு விற்பனை செய்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்திருந்த போதிலும் அப்போது, ஒரு கிலோ சீனியின் விலை 130 ரூபாய் வரை அதிகரித்திருந்தது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வந்தாலும், அதனைவிடவும் அதிகளவான பண மோசடி சீனி இறக்குமதி வரி குறைப்பின் ஊடாக இடம்பெற்றுள்ளது.

கொவிட்-19 தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதற்காக 10 மில்லியன் ரூபாய் பணத்தை தங்களுக்கு பெற்றுக் கொடுக்குமாறு அரசாங்கம் உலக வங்கியிடம் கோரிக்கை விடுத்து வருகின்றது.

இந்த சீனி மோசடியின் காரணமாக அரசாங்கத்திற்கு கிடைக்காமல் போயுள்ள பணத் தொகை கிடைக்கப் பெற்றிருந்தால், தடுப்பூசிகளை எடுத்து வருவதற்கு பயன்படுத்தியிருக்கலாம்.

இந்நிலையில் அரசாங்கம் தங்களுக்கு ஆதரவளித்த நபர்களுக்கு நன்மையளிக்கும் எண்ணத்திலேயே இவ்வாறு வரி குறைப்பை செய்துள்ளது என்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து இதனை மறைப்பதற்கு அரசாங்கம் முயற்கிக்க கூடாது.

இதேவேளை இவ்வாறு மோசடியில் ஈடுபட்ட நபர்களிடமிருந்து மோசடி செய்யப்பட்ட பணத்தை மீள பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பில் அரசாங்கம் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றால், சட்டமா அதிபராவது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கமைய இந்த விவகாரம் தொடர்பில் பல முறைப்பாடுகள் தற்போது அளிக்கப்பட்டுள்ளன.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், மோசடிகள் மற்றும் கொள்ளைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து நியாயத்தை வழங்குவதாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கியிருந்தது. ஆனால் தற்போது மக்கள் பணத்தை கொள்ளையிடும் அரசாங்கமாகவே தன்னை காண்பித்துள்ளது. இது தொடர்பில் நாம் அதிருப்தியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இதேவேளை தற்போது பொருட்களின் விலை பாரியளவில் அதிகரித்து வருகின்றது. பெற்றோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உலக சந்தையில் அதிகரித்துள்ளதால், அதனை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில் எரிவாயு விலையை அதிகரிக்க போவதாகவும் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் பொருட்களின் விலை அதிகரிக்கும் போது, பொருட்களின் விலை அதிகரிப்பதற்காகவும், இயற்கை அனர்த்தங்களின் போது, அதனைக் கூறிக் கொண்டு மக்கள் மீது மேலும் சுமைகளை ஏற்படுத்துவதற்காகவும் நாட்டுக்கு அரசாங்கமொன்று தேவையில்லை. இவ்வாறான சந்தர்ப்பங்களின்போது மக்களை மீட்டெடுப்பதற்காக சலுகைகளை பெற்றுக் கொடுப்பதற்கே அரசாங்கம் அமைக்கப்படுகின்றது.

இந்நிலையில் தேர்தல் காலங்களில் மக்களின் உணர்வுகளுடன் செயற்பட்டு ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றிக் கொள்ள முயற்சிக்கும் அரசாங்கம் என்பதை மீண்டும் உணர்த்தியுள்ளது. அதனால் மக்களுக்கு தொடர்ந்தும் சுமைகளை ஏற்படுத்தாமல் அவர்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றாம்.

No comments:

Post a Comment