இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாடு செல்ல முற்பட்ட 24 பேர் கைது - News View

Breaking

Post Top Ad

Thursday, March 11, 2021

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாடு செல்ல முற்பட்ட 24 பேர் கைது

கல்பிட்டி குரக்கன்ஹேன பகுதியில் நேற்று (11) நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டிற்கு குடியேறத் தயாரான 24 பேரை கடற்படை கைது செய்தது.

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மேற்கொண்ட இந்த சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, கல்பிட்டி குரக்கன்ஹேன பகுதியில் கல்பிட்டி களப்புக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரி வண்டியொன்று சோதனை செய்யப்பட்டதுடன் லாரி வண்டிக்குள் இருந்த சந்தேக நபர்களிடம் கடற்படையினர் விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது குறித்த லாரி வண்டி சாரதியுடன் 24 நபர்கள் இலங்கையிலிருந்து வேறொரு நாட்டிற்கு குடிபெயரத் தயாராகி கல்பிட்டி களப்பு பகுதியில் இருந்து ஒரு படகு வரும் வரை காத்திருப்பது தெரியவந்ததால், அந்தக் குழுவும் லாரி வண்டியும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கடற்படையால் கைது செய்யப்பட்ட 24 நபர்களில் 20 ஆண்கள், ஒரு பெண் (01), இரண்டு பெண் குழந்தைகள் (02) மற்றும் ஒரு சிறுவன் (01) உள்ளனர். 

இவர்களில் 09 பேர் மட்டக்களப்பு பகுதியிலும், 6 பேர் யாழ்ப்பாணம் பகுதியிலும், 05 பேர் முல்லைத்தீவு பகுதியிலும், 03 பேர் திருகோணமலை பகுதியிலும், லாரியின் சாரதி புத்தளம் பகுதியிலும் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த கடத்தலைத் திட்டமிட்ட நபரும் இந்தக் குழுவில் இருப்பதாக கடற்படை சந்தேகப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் அவர்களது லாரி வண்டியும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்பிட்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. இதற்கிடையில், கடலில் இதுபோன்ற சட்டவிரோத இடம்பெயர்வு முயற்சிகளைத் தடுக்க கடற்படை தொடர்ந்து தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad