சீனி இறக்குமதி ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அரசாங்கத்தினால் விசேட அறிவிப்பு - அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் - News View

Breaking

Post Top Ad

Friday, March 19, 2021

சீனி இறக்குமதி ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அரசாங்கத்தினால் விசேட அறிவிப்பு - அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்

(ஆர்.யசி)

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனியில் பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதாக அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டு வருகின்ற நிலையில், அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் நிதி அமைச்சின் சார்பில் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கான வரி குறைப்பின் மூலமாக அரசாங்கத்துக்கு தேவையான சில வியாபாரிகளுக்கே நன்மை கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், வரி குறைப்பு இடம்பெற்ற காலப்பகுதியில் குறித்த ஒரு நிறுவனம் மாத்திரம் கடந்த நவம்பர் மாதத்தில் மாத்திரம் 26 ஆயிரம் மெட்ரிக் தொன் சீனி இறக்குமதி செய்திருக்கின்றதெனவும் பிரதான எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர். 

இவ்வாறான வரி குறைப்பின் மூலம் அரசாங்கத்துக்கு கிடைத்து வந்த லாபம் இல்லாமலாகியதால் 15.9 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சு பாராளுமன்ற பொதுமக்கள் நிதிக் குழுவுக்கு அறிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் சதோச நிறுவனம் கடந்த ஒக்டோபர் 13 ஆம் திகதி ஒரு கிலோ கிராம் சீனியை 127.49 சதம் என்ற அடிப்படையில் 700 மெட்ரிக் தொன்கள் பெற்றுக் கொண்டு ஒரு கிலோ கிராம் சீனியை 85 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில் அரசாங்கம் தொடர்ச்சியாக இந்த குற்றச்சாட்டை நிராகரித்து வருகின்ற நிலையில் குறித்த காலப்பகுதியில் அரசாங்கம் சீனி இறக்குமதி செய்த விதிமுறை எவ்வாறானது, அதனால் கிடைத்த வருமானம் மற்றும் முறைகேடுகள் இடம்பெறாத வகையில் எவ்வாறு இதனை கையாண்டோம் என்பது குறித்து நிதி அமைச்சு தற்போது அறிக்கை ஒன்றினை தயாரித்துள்ளது.

இந்நிலையில் இந்த அறிக்கையையும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் அறிவிக்கும் விதமாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலினால் எதிர்வரும் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.

அத்துடன் அறிவிப்பின் பின்னர் எதிர்க்கட்சியினர் கேட்கும் சகல கேள்விகளுக்கும் தான் பதில் தெரிவிப்பதாகவும், மிகச் சரியான தகவலே பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad