திலகராஜின் பட்டியலில் என்னைச் சேர்த்ததற்காக பெருமைப்படுகிறேன் - உயர்பீட உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட ராமன் செந்தூரன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 17, 2021

திலகராஜின் பட்டியலில் என்னைச் சேர்த்ததற்காக பெருமைப்படுகிறேன் - உயர்பீட உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட ராமன் செந்தூரன்

தொழிலாளர் தேசிய முன்னணியிலிருந்து என்னை நீக்கி முன்னாள் எம்,பி திலகராஜின் பட்டியலில் என்னைச் சேர்த்ததற்காக பெருமைப்படுகிறேன் என தொழிலாளர் தேசிய முன்னணி அரசியல் உயர்பீட உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட ராமன் செந்தூரன் தெரிவித்து உள்ளார்.

தொழிலாளர் தேசிய முன்னணியின் உயர்பீட உறுப்பினராக தாம் வகித்த பதவியில் இருந்து நீக்கப்பட்டமை குறித்து அவர் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்து உள்ளார். 

அவரின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எனது குடும்ப பின்னணி அரசியல் பின்புலமும் கலை ஈடுபாடும் கொண்டது. எனது சகோதரர்கள் மலையக அரசியல் எழுச்சிக்காக சிறைவாசம் அனுபவித்தவர்கள். எனவே சிறு வயது முதல் நாடகத்துறையிலும் அரசியலிலும் ஆர்வம் உள்ளவன் நான். 

அத்தகைய ஆர்வத்தினால் ஹற்றன் றாேயல் கல்வி நிலைய காலத்தில் இருந்தே நண்பர் திலகராஜ் உடன் தொடர்பில் இருப்பவன். எனது சகோதரர்களுக்கு ஏற்பட்ட அரசியல் சிக்கல்களினால் நான் அரசியலில் ஆர்வமற்று இருந்தாலும் திலகராஜ் அவர்களின் அரசியல் பிரவேசித்தின் பின்னர் அதில் ஈடுபாடு காட்டினேன்.

2009 ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தலில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஹங்குரங்கத்தை தொகுதி அமைப்பாளராக செயற்பட்டு சங்கத்தையும் கட்சியையும் அங்கு மீள கட்டமைக்கும் பொறுப்பை பொதுச் செயலாளர் எனக்கு வழங்கினார். அதனை திறம்பட செய்ததால் அரசியல் உயர் பீடத்துக்கும் கட்சியின் கொட்டகலை பிரதேச சபை பகுதி அமைப்பாளராகவும் மாநாட்டில் தெரிவு செய்யப்பட்டேன்.

தோட்டத் தொழிலாளர்கள் அல்லாத சமூக குழுமங்களை கட்சிக்குள் இணைக்கும் பொறுப்பை பொதுச் செயலாளர் எனக்கு வழங்கி இருந்தார். அந்த அடிப்படையில் தோட்ட சேவையாளர்கள், ஆசிரிய சமூகத்தினர், அரச ஊழியர்கள், வர்த்தகர்கள் போன்றவவர்கள் இடையே எமது சமூக அரசியல் வேலைத்திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு விடயங்களை ஒழுங்கு செய்தேன். 

ஆசிரிய பயிற்சி கலாசாலைகளில் பல செயலமர்வுகளை ஒழுங்கு செய்தேன். கொட்டகலையில் பல கருத்தரங்கு செயலமர்வுகளை ஒழுங்கு செய்தேன். பாடசாலைகள் பலவற்றுக்கு உதவிகளைப் பெற்றுக் கொடுத்ததுடன் மாணவர்களுக்கான ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளையும் ஒழுங்கு செய்துநடாத்தி வந்தேன்.

ஒரே தடவை பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகி மலையக மக்கள் பிரதிநிதி ஒருவர் எவ்வாறு செயற்பட வேண்டும் என செயற்பட்டுக் காட்டிய சாதனையாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் ஆள் எனும் பட்டியலில் என்னைச் சேர்த்தது எனக்கு மிகப் பெருமிதமான விடயமாக கருதுகிறேன். என்னை அவர்கள் நீக்கினார்கள் என்பதைவிட என்னை அவர்கள் சேர்த்த இடம் சிறந்தது என்பதால் அந்த முடிவை வரவேற்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

பூண்டுலோயா நிருபர்

No comments:

Post a Comment