ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க அரசாங்கம் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை, முறையான விசாரணை நடத்தாமல் மறைக்க முயற்சித்தால் அது பாரிய பிரச்சினைக்கு கொண்டுசெல்லும் - நிராேஷன் பெரேரா - News View

About Us

About Us

Breaking

Thursday, February 11, 2021

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க அரசாங்கம் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை, முறையான விசாரணை நடத்தாமல் மறைக்க முயற்சித்தால் அது பாரிய பிரச்சினைக்கு கொண்டுசெல்லும் - நிராேஷன் பெரேரா

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க அரசாங்கம் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. மாறாக தாக்குதலை தடுக்க தவறியதாக தெரிவித்து சில அரசியல்வாதிகளை சிக்கவைக்கவே முயற்சிக்கின்றது என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நிராேஷன் பெரேரா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நிதி அமைச்சின் கீழ் இருக்கும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் நியாயம் கிடைக்கா விட்டால் சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டிவரும் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்திருக்கின்றார். 

தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க அனைத்து ஆவணங்களையும் சட்டமா அதிபரிடம் கையளித்திருப்பதாக பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சர் சரத் வீரசேகர சபையில் தெரிவித்திருந்தார். ஆனால் சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, வழக்கு தொடுக்கும் அளவுக்கு முறையான விசாரணை இடம்பெற்றில்லை. அதனால் முறையான விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு அந்த ஆவணங்களை அனுப்பி இருக்கின்றார்.

அதனால் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதாக அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது தெரிவித்தருந்தது. ஒரு வருடமாகியும் அது தொடர்பான விசாரணையை கூட முறையாக நடத்த முடியாத அளவுக்கு சென்றிருக்கின்றது. 

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரச தரப்பினர் எமது மதத் தலைவர்களிடம் இது தொடர்பாக பல்வேறு தகவல்களை தெரிவிக்கின்றபோதும், இந்த விசாரணையை மறைக்க இந்த அரசாங்கமும் முயற்சிக்கின்றதா என்ற கேள்வி எமக்கு எழுகின்றது. அதனால் இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க அரசாங்கத்திடம் எந்த முயற்சியும் இல்லை. 

குறைந்தபட்சம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கும் சாரா என்ற பெண் தொடர்பாகவேனும் விசாரணை மேற்கொள்ள இவர்கள் முயற்சிப்பதில்லை. மாறாக தாக்குதல் இடம்பெறாமல் தடுப்பதற்கு தவறினார்கள் என சில அரசியல் தலைவர்களை சிக்க வைக்க மிகவும் தேவையுடன் செயற்படுகின்றதை காணமுடிகின்றது.

எனவே ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி, அதன் பின்னணியில் இருந்தவர்கள், அவர்களுக்கு அரசியல் பாதுகாப்பு வழங்கியவர்கள் யார் என்ற விடயங்களை வெளிப்படுத்த வேண்டும். இது தொடர்பான முறையான விசாரணை மேற்கொள்ளாமல் அரசாங்கம் மறைக்க முயற்சித்தால், அது பாரிய பிரச்சினைக்கு கொண்டுசெல்லும் என்றார்.

No comments:

Post a Comment