இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பு எதிர்வரும் காலங்களிலும் தொடரும் - இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கை சபாநாயகரிடம் தெரிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 17, 2021

இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பு எதிர்வரும் காலங்களிலும் தொடரும் - இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கை சபாநாயகரிடம் தெரிவிப்பு

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்டுள்ள சவாலுக்கு முகங்கொடுப்பதில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையில் காணப்படும் ஒத்துழைப்பு எதிர்வரும் காலங்களிலும் தொடரும் என்று இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே புதன்கிழமை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவை கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்கு தனது பாராட்டையும் தெரிவித்தார்.

அத்தோடு கொவிட்-19 தடுப்பு மருந்து ஏற்றும் பணிகள் மிகவும் சுமுகமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையைப் பாராட்டிய இந்திய உயர்ஸ்தானிகர், இவ்விடயத்தில் இந்தியா முக்கிய பங்கொன்றை வகிக்கின்றமை தொடர்பில் தனது மகிழ்ச்சியையும் வெளியிட்டார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 500,000 தடுப்பு மருந்துகள் இலங்கைக்கு வழங்கப்பட்டமையை நினைவு கூர்ந்த உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, கொரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்டுள்ள சவாலுக்கு முகங்கொடுப்பதில் இரு நாடுகளுக்கு இடையில் காணப்படும் ஒத்துழைப்பு எதிர்வரும் காலங்களிலும் தொடரும் என்று குறிப்பிட்டார்.

மேலும் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் தமக்கிடையில் ஜனநாயகக் கோட்பாடுகளையும் பாரம்பரிய மரபுகளையும் தொடர்ச்சியாகப் பகிர்ந்து வரும் அதேவேளை, இலங்கை மக்களுக்கும் அவர்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கும் தம்மால் இயன்ற உதவிகளை வழங்குவது இந்தியாவிற்கு பெருமையளிப்பதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் இச்சந்திப்பின் போது எடுத்துரைத்தார்.

இந்தியாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட கொவிட்-19 தடுப்பு மருந்து சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிற்கு ஏற்றப்படுவதையும் இந்திய உயர்ஸ்தானிகர் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad